இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.


477 ரன்களுக்கு ஆல் அவுட்:


இதில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடியது. ரோகித்சர்மா, சுப்மன்கில் அபார சதம் அடித்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் அளித்தனர், இதையடுத்து, தேவ்தத் படிக்கல் – சர்பராஸ் கான் அபார அரைசதம் அடித்தனர். இந்திய அணியின் பின்வரிசையினர் ரன்களை சேர்க்கத் தவறிய நிலையில், இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்று ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்தில் 477 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.


இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன்கில் 110 ரன்களும், கேப்டன் ரோகித்சர்மா 103 ரன்களும் விளாசினர். படிக்கல் 65 ரன்களும், சர்பராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் குல்தீப் யாதவ் 30 ரன்களை எடுத்தார்.


259 ரன்கள் முன்னிலை:


இந்திய அணி இங்கிலாந்தை காட்டிலும் முதல் இன்னிங்சில் 259 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணிக்கு எதிராக இந்த தொடர் முழுவதும் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி வரும் சோயிப் பஷீர் இந்த இன்னிங்சிலும் அசத்தினார். அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கி இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. இங்கிலாந்து அணிக்காக அதிரடியாக ஆட முயற்சித்த இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் 2 ரன்களில் அஸ்வின் பந்தில் போல்டானார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தினால் இந்திய அணி இந்த போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புகள் மிக அதிகம். தற்போது இங்கிலாந்து அணிக்காக ஜாக் கிராவ்லி – பென் டக்கெட் இருவரும் ஆடி வருகின்றனர்.


இந்திய அணிக்காக கடந்த இன்னிங்சில் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜா சுழலில் அசத்தினர். அதேபோல, இந்த இன்னிங்சிலும் இந்த மூவர் சுழல் கூட்டணி அசத்தும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர்.


மேலும் படிக்க: Team India Test Record: 15 ஆண்டுகளில் முதன்முறை...இந்திய அணி வரலாற்று சாதனை!


மேலும் படிக்க: Devdutt Padikkal: அறிமுக டெஸ்ட்டிலேயே அசத்திய படிக்கல்! அரைசதம் விளாசிய சர்பராஸ் கான்!