இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று இந்திய அணி 3விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாளில் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 245 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. புஜாரா(66) மற்றும் ரிஷப் பண்ட்(57) இருவரும் அரைசதம் கடந்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 378 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் லீஸ் மற்றும் க்ராளி ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 107 ரன்கள் சேர்த்தனர். க்ராளி 46 ரன்களுடன் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த போப் உணவு இடைவேளைக்கு பிறகு முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான லீஸ் அரைசதம் கடந்து 56 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகினார். இதன்காரணமாக இங்கிலாந்து அணி 109 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. அதன்பின்னர் ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்தனர். ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். நான்காவது நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 76* ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 72* ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 119 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் நான்காவது விக்கெட்டிற்கு 150 ரன்கள் சேர்த்துள்ளனர். கடைசி நாளான நாளை இங்கிலாந்து அணியை இவர்கள் வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்கெனவே இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்