இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் தொடங்கி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் ஏற்கனவே 4 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது, இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்ற நிலையில் இந்த தொடரின் கடைசிப் போட்டி இன்று அதாவது மார்ச் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்தப் போட்டி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து அணியின் போர்ஸ்டோவ் ஆகியோருக்கு 100வது டெஸ்ட் போட்டி ஆகும். இங்கிலாந்து அணி தனது முதல் விக்கெட்டினை 64 ரன்களில் இருந்த போது இழந்தது. முதல் விக்கெட்டினை கைப்பற்றிய குல்தீப் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் தொடங்கி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார்.
இங்கிலாந்து அணிக்கு எதாவது ஒரு ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோது எல்லாம் குல்தீப் அணிக்கு விக்கெட்டுகளை அள்ளிக்கொடுத்துக் கொண்டே இருந்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜாக் கார்வ்லி மட்டும் அரைசம் விளாசி இருந்தார். அவர் 108 பந்துகளில் 11 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 79 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணியின் ஜாக் கார்வ்லி, பென் டக்கட், ஒல்லி போப், பேரிஸ்டோவ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார். இதில் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா ரூட்டின் விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார். 100வது போட்டியில் களமிறங்கிய அஸ்வினுக்காகவே காத்திருந்து களமிறங்கினர் இங்கிலாந்து அணியின் டைல் எண்டர்ஸ். இங்கிலாந்து அணியின் பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது விக்கெட்டினை அஸ்வின் கைப்பற்றி அசத்தினார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலுக்கு தாக்கு பிடிக்க முடியாத இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது.