இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சர்பராஸ் கான் அறிமுகம் ஆகியுள்ளார். 


இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சுழற்பந்து ஜாம்பவானுமான அனில் கும்ப்ளே, சர்பராச் கானுக்கு டெஸ்ட் அறிமுக தொப்பியை வழங்கினார். இதன்மூலம், இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாடும் 311வது வீரர் என்ற பெர்மையை சர்பராஸ் கான் பெற்றுள்ளார். 






சர்பராஸ் கான் தனது அறிமுக தொப்பையை பெற்றபோது, அவரது தந்தையின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது. மகனுக்கு அறிமுக தொப்பி கிடைத்ததும், தந்தை உணர்ச்சிவசப்பட்டு முத்தமிட்டார். தந்தை நௌஷாத் கானும் ஒரு கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர். சர்பராஸ் கானுக்கு சிறுவயது முதலே பயிற்சியாளராக இருந்து கிரிக்கெட்டை பயிற்றுவித்தார். 






தற்போது, சர்பராஸ் கானின் தந்தை நௌஷாத் கான் ஆனந்த கண்ணீர் வடித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ராஜ்கோட் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில், இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் லெவனில் இந்திய அணி பல மாற்றங்களை செய்துள்ளது. 


அதன்படி, ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சர்பராஸ் கானும், கே.எஸ்.பரத்துக்கு பதிலாக துருவ் ஜூரலும் இந்திய அணியில் அறிமுகமாகினர். டாஸ் போடுவதற்கு முன்பாக இருவருக்கும் அறிமுக தொப்பி வழங்கப்பட்டது. அப்போது, தொப்பியை பெற்றுக்கொண்ட சர்பராஸ் கான் நேராக ஸ்டேடியத்தில் நின்றிருந்த தன் தாய் மற்றும் தந்தையை நோக்கி சென்றாஎ. இந்திய அணியின் தொப்பியை பார்த்த சர்பராஸின் தந்தையால் கண்ணில் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. உடனிருந்த சர்பராஸின் தாயும் அப்போது உணர்ச்சி வசப்பட்டு அழுதார். 






சர்பராஸ் கான் முதல் தர போட்டி விவரம்: 


முதல் தர போட்டிகளில் இதுவரை சிறப்பாக விளையாடியுள்ள சர்பராஸ் கான், முச்சதமும் அடித்துள்ளார். இதுவரை 45 முதல் தர போட்டிகளில் விளையாடி 14 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் உதவியுடன் 3912 ரன்கள் எடுத்துள்ளார். ஆட்டமிழக்காமல் 301 ரன்கள் எடுத்ததே சர்பராஸின் சிறந்த ஸ்கோர். 
இதேபோல், 37 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 629 ரன்களும்,  96 டி20 போட்டிகளில் விளையாடி 1188 ரன்கள் எடுத்துள்ளார். 


இந்தியா ஏ அணிக்காக சதம் அடித்த சர்பராஸ் கான்: 


இந்தியா ஏ அணிக்காக சமீபத்தில் விளையாடிய சர்பராஸ் கான், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தார். கடந்த ஜனவரி 24 அன்று அகமதாபாத்தில் நடந்த போட்டியில் சர்பராஸ் கான், 55 மற்றும் 161 ரன்கள் எடுத்திருந்தார். முன்னதாக, ஜனவரி 12 அன்று இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக 96 ரன்களும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.