இந்தியா வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.


இன்று 3வது டெஸ்ட்:


இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் இன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் மோதுகின்றனர். இரு அணிகளும் தலா 1 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஆர்வத்துடன் இருப்பார்கள்.


கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தன்னம்பிக்கையுடன் இருக்கும். இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக விராட்கோலி இந்த தொடரில் இருந்து விலகியிருப்பது அமைந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் விராட் கோலி ஒரு டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகியிருப்பது இதுவே முதன்முறை ஆகும். கே.எல்.ராகுலும் இந்த டெஸ்டில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பலவீனம் ஆகும்.


பேட்டிங், பவுலிங்:


இந்திய அணிக்கு பேட்டிங்கில் பலமாக ஜெய்ஸ்வால், சுப்மன்கில் போன்ற இளம் வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த கேப்டன் ரோகித்சர்மா உள்ளார். கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சோபிக்காத ரோகித் சர்மா இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தால் இங்கிலாந்துக்கு தலைவலியாக அமையும். ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார்.


இளம் வீரர்களான படிதார், பரத், படிக்கல் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். பந்துவீச்சில் பும்ரா அசத்தி வருகிறார். அவருடன் கடந்த போட்டியில் களமிறங்காத சிராஜ் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு பக்கபலமாக இருப்பது அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா சுழல் ஆகும். இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் கண்டிப்பாக 500 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இங்கிலாந்து பலம், பலவீனம்:


இங்கிலாந்து அணியும் சரிசம பலம் வாய்ந்த அணியாக உள்ளனர். கிராவ்லி, டக்கெட் சிறந்த தொடக்கம் அளித்தால் பின்வரிசைக்கு பக்கபலமாக அமையும். ஒல்லி போப்பும் சிறந்த ஃபார்மில் உள்ளார். முன்னாள் கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக பேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து மோசமாக ஆடி வருவது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது.


வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் அச்சுறுத்தலாக இருப்பார் என்று கருதப்படுகிறது. இளம் வீரர் சோயிப் பஷீர், ரெஹன் அகமது சுழலில் அச்சுறுத்தலாக திகழ்வார்கள் என்று கருதப்படுகிறது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அந்த அணிக்கு பக்கபலமாக உள்ளார்.


பேட்டிங் சாதகம்:


சரிசம பலம் வாய்ந்த இரு அணிகளும் இன்று மோதுவதால் நிச்சயம் ரசிகர்களுக்கு இந்த போட்டி விருந்தாக அமையும் என்று கருதப்படுகிறது. ராஜ்கோட் மைதானத்தில் 28 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியும். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு பக்கபலமான மைதானம் ஆகும்.


முதல் இன்னிங்சின் சராசரி ஸ்கோர் இங்கு 593 ஆகும். இரண்டாவது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 334 ஆகும். 3வது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 228 ஆகும். 4வது இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 172 ஆகும்.


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி இந்த மைதானத்தில் 649 ரன்களை விளாசியதே அதிகபட்சம் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களை எடுத்ததே குறைந்தபட்சம் ஆகும்.