Rohit Sharma - Jadeja: இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்து இரண்டு நோ பால் வீசிய ஜடேஜாவை இந்திய கேப்டன் ரோகித் சர்மா நக்கலாக விமர்சித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என இரு அணிகளும் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 445 ரன்கள் குவித்துள்ளது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 207/2 என்ற ஸ்கோருடன் 238 ரன்கள் பின்தங்கியுள்ளது.
பென் டக்கெட் ஆட்டமிழக்காமல் 133* ரன்கள் எடுத்து களத்தில் இருக்க, ஒல்லி போப் 39 ரன்கள் குவித்து முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஆர். அஷ்வின் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஜடேஜா பந்துவீச்சு:
பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக உள்ள இந்த மைதானத்தில், இங்கிலாந்தை வீழ்த்த இந்திய அணி பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. ஆனால், நேற்று இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஜடேஜாவின் செயல்பாடு திருப்திகரமாக அமையவில்லை. நாள் முடிவில் 4 ஓவர்களை வீசிய அவர், 33 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். 31வது ஓவரில் ஜோ ரூட்டிற்கு எதிராக பந்து வீசும்போது ஜடேஜா இரண்டு நோ-பால்களை வீசினார். வழக்கமாக பெரிதும் நோ பால்களை வீசாத ஜடேஜா, அடுத்தடுத்து இரண்டு நோ பால்களை வீசியது பலரையும் ஆச்சரியப்பட செய்தது.
ஜடேஜாவை விமர்சித்த ரோகித் சர்மா:
இதனிடயே, ஜடேஜா அடுத்தடுத்து நோ பால் வீசியது தொடர்பாக ரோகித் சர்மா சொன்ன கருத்து, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு நோ பால்களை வீசியதும் ”Yaar, ye Jadeja IPL mein to itne No Balls nahi dalta. T20 samajh ke bowling kar, Jaddu” என கூறியுள்ளார். அதன்படி, ”மேன், ஜடேஜா ஐபிஎல்லில் இவ்வளவு நோ-பால்களை வீசுவதில்லை. இது ஒரு டி20 ஆட்டம் என்று நினைத்து பந்து வீசு. இங்கு நோ பால்கள் எல்லாம் அனுமத்ப்பதில்லை” என ரோகித் சர்மா வலியுறுத்தியுள்ளார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.