குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் முதன்முறையாக துருவ் ஜோயல் மற்றும் சர்ப்ராஸ் கான் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர். இதுவரை இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக களமிறங்கி வந்த கே.எஸ்.பரத்துக்கு பதிலாக இந்த போட்டியில் துருவ் ஜோயல் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ளார்.
இந்த மைதானம் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்து அணியில் பந்துவீச்சாளர்களாக ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் வேகத்தில் மிரட்ட காத்துள்ளனர். இவர்களுடன் பென் ஸ்டோக்சும் இந்திய அணியை வேகத்தில் அச்சுறுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் புதிய இளம் சுழல் கூட்டணி ரெஹன் அகமது – டாம் ஹார்ட்லி இந்த போட்டியில் எப்படி வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித்சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்குகின்றனர். சுப்மன்கில் கடந்த டெஸ்ட் போல இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினால் இந்திய அணிக்கு பக்கபலமாக அமையும்.
இளம் வீரர்களான படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல் தங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுழல் கூட்டணியாக ஜடேஜா – அஸ்வின் – குல்தீப் யாதவ் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் மிரட்ட காத்துள்ளனர்.
இதுவரை இரு அணிகளும் மோதிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து, இந்தியா தலா 1 போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் முனைப்பு காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில் இந்திய அணி ரன்களை குவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இளம் வீரர்கள் படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல் எப்படி ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.