இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணிக்காக ஆட்டத்தை ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் ஜோடி தொடங்கியது.


33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்:


இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் இந்த போட்டியிலும் அதிரடியாகவே ஆட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், மார்க் வுட் பந்தில் 10 பந்தில் 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.


அவர் ஆட்டமிழந்த பிறகு கடந்த டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய சுப்மன்கில் களமிறங்கினார். அவர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை அளித்தார். இதையடுத்து, மற்றொரு இளம் வீரர் ரஜத் படிதார் களமிறங்கினார். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 33 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி தடுமாறியது.


ரோகித் - ஜடேஜா:


அப்போது, கேப்டன் ரோகித்சர்மாவுடன் ஆல் ரவுண்டர் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணியை தாங்கிப்பிடிக்கத் தொடங்கினர். ஆண்டர்சன், மார்க் வுட், டாம் ஹார்ட்லி, ஜோ ரூட், ரெஹன் அகமது என மாறி, மாறி இங்கிலாந்து பந்துவீச்சு தாக்குதல் நடத்தியும் இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை.


இங்கிலாந்து பந்துவீச்சை நிதானமாகவும், அதேசமயம் ஏதுவாகவும் கையாண்ட ரோகித் – ஜடேஜா இருவரும் பவுண்டரிகளுக்கு அனுப்பினர். இதனால், இந்தியாவின் ஸ்கோரும் ஏறியது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். இந்திய அணியும் 100 ரன்களை கடந்தது. இந்திய அணி தற்போது வரை 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களுடன் ஆடி வருகிறது.


தடுமாறும் இந்திய மிடில் ஆர்டர்:


ரோகித் சர்மா 73 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணியின் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ள சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல், அஸ்வின் அடுத்தடுத்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர். டெஸ்ட் தொடரில் கடந்த சில காலமாகவே சொதப்பி வரும் சுப்மன்கில், கடந்த டெஸ்ட்டில் சதம் விளாசியதன் மூலம் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார் என்று கருதப்பட்டது.


ஆனால், இன்றைய போட்டியில் அவர் மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார். விராட் கோலி, கே.எல்.ராகுல் இல்லாததால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சரிந்துள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.


மேலும் படிக்க: INDvsENG 3rd Test: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்! அறிமுக வீரர்களாக களமிறங்கிய ஜோயல், சர்ப்ராஸ் கான்!


மேலும் படிக்க: Sarfaraz Khan Debut: இறுதியாக டெஸ்டில் அறிமுகமானார் சர்பராஸ் கான்.. ஆனந்த கண்ணீர் வடித்த தந்தை நௌஷாத் கான்!