இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 214 ரன்களும், சர்பராஸ் கான் 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியின் ஆக்ரோஷமான பேட்டிங் மூலம் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது. தற்போது இந்த இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. 


முன்னதாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒரு டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் 400+ ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 


இந்திய அணி ஒரு டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் 400+ ரன்கள்: 



  • 407 & 407/9 vs பாகிஸ்தான் - கொல்கத்தா (2005)

  • 426 & 412/4 vs இலங்கை - அகமதாபாத் (2009)

  • 445 & 430/4 vs இங்கிலாந்து - ராஜ்கோட் (2024)


என்ன நடந்தது இன்றைய நாளில்..?


போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. காயம் காரணமாக நேற்றைய நாளில் சதம் அடித்து வெளியேறிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் இன்று சுப்மன் கில் அவுட்டானது களத்திற்கு திரும்பினார். மீண்டும் பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் 236 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 214 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை அடித்ததன் அடிப்படையில் ஜெய்ஸ்வால், வாசிம் அக்ரமை சமன் செய்தார். இப்போது ஜெய்ஸ்வால் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆனார். 


ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்:



  • 12 - யஷஸ்வி ஜெய்ஸ்வால் vs இங்கிலாந்து - ராஜ்கோட் (2024)

  • 12 - வாசிம் அக்ரம் vs ஜிம்பாப்வே - ஷேகுபுரா (1996)

  • 11 மேத்யூ ஹைடன் vs ஜிம்பாப்வே - பெர்த் (2003)

  • 11 ஆஸ்டல் vs இங்கிலாந்து - கிறிஸ்ட்சர்ச் (2002)

  • 11 பிரண்டன் மெக்கல்லம் vs பாகிஸ்தான் - ஷார்ஜா (2014)

  • 11 பிரண்டன் மெக்கல்லம் vs இலங்கை - கிறிஸ்ட்சர்ச் (2014)

  • 11 பென் ஸ்டோக்ஸ் vs இலங்கை - கேப் டவுன் (2016)

  • 11 குசல் மெண்டிஸ் vs அயர்லாந்து - காலே (2023)


தொடக்கத்தில் விக்கெட்டை விட்ட ரோஹித் சர்மா:


இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. இந்திய அணி 12வது ஓவரில் 30 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ரோஹித் சர்மாவின் முதல் விக்கெட்டை இழந்தது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள் உதவியுடன் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ரூட் பந்துவீச்சில் அவுட்டானார். 


பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இரண்டாவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் (201 பந்துகள்) சேர்த்தனர், அதன் பிறகு ஜெய்ஸ்வால் காயம் காரணமாக சதம் அடித்து வெளியேற, பின்னர் பேட்டிங் செய்ய வந்த ரஜத் படிதார் 10 பந்துகள் விளையாடி டக் அவுட் ஆனார். இதையடுத்து, கில் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 55 (98 பந்துகள்) ரன்கள் சேர்த்தனர். 91 ரன்களில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில், எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேற, குல்தீப் யாதவ் 27 ரன்களில் அவுட்டானார். 


இதன் பிறகு, ஆறாவது இடத்தில் வந்த சர்பராஸ் கானுடன், மீண்டும் களத்தில் வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 172* (158 பந்துகள்) பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதன் போது, ​​ஜெய்ஸ்வால் 214* ரன்களையும், சர்பராஸ் கான் 72 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68* ரன்களையும் எடுத்தனர். இதையடுத்து ரோஹித் சர்மா இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.