ராஜ் கோட்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்வால் அடித்த 2வது இரட்டை சதம் இதுவாகும். மேலும், இந்த 2 இரட்டை சதங்களும் இந்த தொடரில் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் இதுவரை 3 சதம், 2 இரட்டை சதம் அடித்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசி 147 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். 231 பந்துகளில் 14 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் உதவியுடன் இரட்டை சதம் விளாசியுள்ளார்.
ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்:
டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதன்மூலம், நவ்ஜோத் சிங் சித்து மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் சாதனையை முறியடித்தார். இந்திய அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10 சிக்ஸர்கள் அடித்து ஜெய்வால் முதலிடத்திற்கு முன்னேறினார். அதேசமயம், நவ்ஜோத் சிங் சித்து மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தலா 8 சிக்ஸர்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
மேலும், ஒரு டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்ததன் அடிப்படையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இப்போது கூட்டாக முதல் இடத்தை எட்டியுள்ளார். கடந்த 1996ம் ஆண்டு அக்டோபரில் ஜிம்பாப்வேக்கு எதிராக 257 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம், அன்றைய இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை விளாசி இருந்தார். இன்றைய இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 236 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் உதவியுடன் 214 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம், வாசிம் அக்ரமின் 27 ஆண்டுகால சாதனை சமன் செய்யப்பட்டது.
போட்டி சுருக்கம்:
இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 214 ரன்கள் எடுத்தார். அதேசமயம் சுப்மன் கில் 91 ரன்களும், சர்பராஸ் கான் ஆட்டமிழக்காமல் 68 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில், முன்னதாக இந்தியா தனது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் 319 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்தியா முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் 126 ரன்கள் முன்னிலை பெற்றது.