இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் இன்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி இன்றைய போட்டிக்கு நான்கு மாற்றங்களை செய்து இளம் பந்துவீச்சாளர்களை களமிறக்கியது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் ஜேசன் ராய் அதிரடி காட்டினர். கேப்டன் பட்லர் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த போது அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் 27 ரன்களில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன்காரணமாக இங்கிலாந்து அணி 9 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த பில் சால்ட் 8 ரன்களுக்கு ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் டேவிட் மலான் சிறப்பாக ஆடி வந்தார். இவர் 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின்னரும் அதிரடி காட்டி வந்தார். இதனால் இங்கிலாந்து அணி 13 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மலான் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் இந்திய அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டனர். 15 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து 150 ரன்கள் விளாசியிருந்தது. ஆட்டத்தின் 17வது ஓவரை வீசிய ரவி பிஷ்னோய் முதலில் 77 ரன்களுக்கு டேவிட் மலான் விக்கெட்டை எடுத்தார். அதற்கு அடுத்த பந்தில் மொயின் அலியின் விக்கெட்டையும் எடுத்து அசத்தினார். டேவிட் மலான் 39 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் விளாசி 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடி காட்டினார். இதன்காரணமாக 20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர். அவேஷ் கான் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்