இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் 39 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன்காரணமாக இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. 

 

216 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பண்ட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி இரண்டு பவுண்டரிகள் விளாசி 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் கேப்டன் ரோகித் சர்மாவும் 11 ரன்களில் டாப்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

 

இதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆட தொடங்கினர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இந்திய அணி 13 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி வெற்றி பெற 42 பந்துகளில் 99 ரன்கள் தேவைப்பட்டது. இதன்காரணமாக இருவரும் அதிரடியாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடியாக 119 ரன்கள் குவித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த போது டாப்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் கடந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் சதத்தை அவர் பதிவு செய்தார். அடுத்த வந்த தினேஷ் கார்த்திக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜாவும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 175 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 2 ஓவர்களில் இந்திய வெற்றி 42 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது ஆட்டத்தின் 19வது ஓவரை மொயின் அலி வீசினார். அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசிய சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். அவர் 55 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் உடன் 117 ரன்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு198 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண