IND Vs ENG 2ND Test: இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது.


இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், கையில் இருந்த வெற்றி வாய்ப்பை இந்திய அணி நழுவவிட்டு ரசிகர்களை ஏமாற்றியது. இதன் மூலம், இங்கிலாந்து அணி தற்போது இந்த தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இன்று தொடங்குகிறது.



இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி:


இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் உத்வேகத்துடன் இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. அதேநேரம், இரண்டாவது போட்டியில் வென்று தொடரில் வெற்றி கணக்கை தொடங்க இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போட்டியின் நேரலைய ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


இந்திய அணியின் பேட்டிங் பிரச்னை:


பேட்டிங்கில் சொதப்பியதே முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஏற்கனவே நட்சத்திர வீரர் கோலி முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய நிலையில், காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு, கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஷ் அய்யர் ஆக்யோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. 


இங்கிலாந்து அணி நிலவரம்:


இந்திய அணியின் சுழற்பந்து வியூகத்தை தங்களால்  வீழ்த்த முடியும் என்பதை, இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் முதல் போட்டியில் நிரூபித்து விட்டார். இதனால், இரண்டாவது போட்டியிலும் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் இன்றய போட்டியில் களமிறங்குகிறார். அதோடு, சோயப் பஷிர் என்ற புதிய சுழற்பந்துவீச்சாளர் இந்த போட்டியின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.


விசாகப்பட்டினம் மைதானம் எப்படி?


விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானம்,  எப்போதுமே பேட்டிங்கிற்கு  சாதகமாக இருக்கும். ஆனால், இந்த ஆடுகளம் கடந்த ஆட்டங்களில் நேரம் செல்ல செல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருந்துள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. போட்டியில் வானிலை எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிளேயிங் லெவன்:


இந்தியா உத்தேச அணி:  ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்,  சுப்மான் கில், ஷ்ரேயாஸ் அய்யர், ரஜத் படிதார், அக்சர் படேல், கேஎஸ் பாரத் ,  ஆர் அஷ்வின்,  குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


இங்கிலாந்து: சாக் கிராலி, பென் டக்கெட்,  ஒல்லி போப்,  ஜோ ரூட்,  ஜானி பேர்ஸ்டோ,  பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்),  பென் ஃபோக்ஸ்,  ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி,  ஷோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.