இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது, இதில் முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான இரண்டாவது ஒரு நாள் போட்டி  ஒடிசாவில் உள்ள பாராபதி மைதானத்தில் நடைப்பெற உள்ளது. 


ஒடிசா பாராபதி மைதானம்: 


கட்டாக்கின் பராபதி மைதானம் 1982 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 19 ஒருநாள் போட்டிகளை நடத்தியுள்ளது, இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 45,000 பேர் வரை அமர்ந்து போட்டியை காணலாம். 


பிட்ச் ரிப்போர்ட்: 


இந்த மைதானம் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக சுழன்று திரும்பும் வகையில் சாதகமாக இருக்கும். மேலும் வேகப்பந்து வீச்சார்களுக்கு பந்து செமி ஓல்டாக இருக்கும் போது பிட்ச்சில் பவுன்ஸ்சானது மாறுப்படும், இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க சற்று சிரமமாக இருக்கும். மேலும் இந்த மைதானத்தில் 260-280 ரன்கள் எடுப்பது ஒரு நல்ல ஸ்கோராகும்.


மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியா தனது 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்த மைதானத்தில் களமிறங்கு , அதே நேரத்தில் அடில் ரஷீத் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை வழிநடத்துவதால் இந்தப் போட்டியில் அவரது  பந்துவீச்சு முக்கிய பங்கை வகிக்கும். டாஸ் வெல்லும் அணி இங்கு முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். 


இந்த மைதானத்தில் 19 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 7 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 12 முறையும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோர் 229 ஆகும். 


தனிநபர் அதிகபட்ச  ஸ்கோர் : 


ஏப்ரல் 1998 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக முகமது அசாருதீன் 153*(150) ரன்கள் எடுத்தார், இந்த மைதானத்தில் தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராகும்.


ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர்:


ஜனவரி 19, 2017 அன்று  இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 381/6 ரன்கள் எடுத்தது. அந்த போட்டியில் யுவராஜ் சிங் (127 பந்துகளில் 150 ரன்கள்) மற்றும் எம்.எஸ். தோனி (122 பந்துகளில் 134 ரன்கள்) ஆகியோர் 5வது விக்கெட்டுக்கு 257 ரன்கள் சேர்த்ததன் மூலம் தங்கள் கடைசி சர்வதேச சதங்களை அடித்தனர்.


மிகக் குறைந்த ஸ்கோர்: 


ஜனவரி 2007 இல் இந்தியாவுக்கு எதிராக 190 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தியபோது மேற்கிந்திய தீவுகள் அணி எடுத்த 169 ரன்கள் எடுத்ததே கட்டாக்கில் ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும். 


சிறந்த பந்துவீச்சு


நவம்பர் 2014 இல் இலங்கைக்கு எதிராக இஷாந்த் சர்மா எடுத்த 4/34 கட்டாக்கில் சிறந்த பந்து வீச்சாகும்.