டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித். ஆலன் பார்டர், பாண்டிங் போன்ற ஜாம்பவான்களுக்கு நிகராக கொண்டாடப்படும் கிரிக்கெட் வீரராக திகழ்கிறார். தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் கேப்டனாக களமிறங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் சதம் விளாசி அசத்தியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த சாதனைக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. 


பால் டேம்பரிங்:


விளையாட்டு வீரன் என்பவன் தோல்வியில் இருந்து மீண்டு வந்து போராடுபவன். அதற்கு பல விளையாட்டுகளில் பல வீரர்கள் உதாரணமாக உள்ளனர். அப்படி ஒரு வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஸ்டீவ் வாக்கிடம் இருந்து பாண்டிங், பாண்டிங்கிடம் இருந்து மைக்கேல் கிளார்க், கிளார்க்கிடம் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தின் கையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வந்தது. 


அசுர பலத்துடன் உலா வந்த ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அவமானச் சின்னமாக மாறியது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பால் டேம்பரிங் விவகாரம். பந்தை காகிதத் தாளை வைத்து தேய்த்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவிக்க அப்போது கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் சம்மதத்துடன் இந்த விவகாரம் நடந்தது வெளிவந்தது. 


தடை அதை உடை:


இதையடுத்து, நட்சத்திர வீரரான ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு எந்தவித கிரிக்கெட்டிலும் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தின்போது பேட்டி அளித்த ஸ்மித் தன் தவறை உணர்ந்து கண்ணீர்விட்டார். 2018ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை 2019ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்பிய ஸ்மித்திற்கு கண்டனங்கள் எழுந்து கொண்டே இருந்தது. 


ஆனாலும், முன்பு போல ஆக்ரோஷத்திலும் ஸ்லெட்ஜிங்கிலும் கவனம் செலுத்தாமல் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினார் ஸ்மித். தனது அசுர பேட்டிங் பலத்துடன் திரும்பிய அவர் சதங்கள் மேல் சதங்கள் அடித்து அசத்தி வருகிறார். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பிய ஸ்மித் அந்தாண்டு மட்டும் டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களுடன் 965 ரன்கள் எடுத்தார். 


சதம் மேல் சதம்:


கொரோனா காரணமாக 2020, 21ம் ஆண்டு பெரியளவு போட்டிகள் நடக்காத நிலையில் 2022ம் ஆண்டு 2 சதங்கள, 5 அரைசதங்களுடன் அந்தாண்டு நடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் 876 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். பின்னர், 2023ம் ஆண்டு 13 டெஸ்ட் போட்டியில் 3 சதங்கள், 3 அரைசதங்களுடன் 929 ரன்களும்ல 2024ம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களுடன் 490 ரன்களும் எடுத்தார். 


கடந்தாண்டு டெஸ்ட் போட்டிகளின் தொடக்கத்தில் தடுமாறி வந்த ஸ்மித் இந்திய அணிக்கு எதிரான தொடர் மூலம் கம்பேக் கொடுத்தார். தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கம்மின்ஸ் இல்லாத நிலையில் கேப்டனாக களமிறங்கியுள்ள ஸ்மித் இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். 



டெஸ்ட் போட்டிகளில் அசத்தல்:


2025ம் ஆண்டை இனிதே தொடங்கியுள்ள ஸ்டீவ் ஸ்மித் தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களையும் இலங்கைக்கு எதிரான தொடர் மூலம் கடந்தார். தடை விதிக்கப்பட்ட பிறகு மீண்டும் கிரிக்கெட்டிற்கு  திரும்பிய ஸ்டீவ் ஸ்மித் டி20 போட்டிகளில் பெரிதும் ஆடாத நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தான் எப்போதும் தனித்துவமான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து வருகிறார். 


35 வயதான ஸ்மித் இதுவரை 116 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 206 இன்னிங்சில் பேட் செய்து 36 சதங்கள், 4 இரட்டை சதங்கள் மற்றும் 41 அரைசதங்களுடன் 10 ஆயிரத்து 260 ரன்கள் எடுத்துள்ளார். 165 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 662 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 சதங்கள் 34 அரைசதங்கள் அடங்கும். 67 டி20 போட்டிகளில் ஆடி 1094 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 103 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 485 ரன்கள் எடுத்துள்ளார்.