இந்தியாவிற்கு டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளும் மேதும் மதல் டெஸ்ட் போட்டி ஹைதரபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து ஆடி வருகிறது.


சுழல் தாக்குதல்:


இங்கிலாந்து அணிக்காக முதல் இன்னிங்சை ஜாக் கிராவ்லி – பென் டக்கெட் ஜோடி தொடங்கியது. இருவரும் இணைந்து அதிரடியாகவே ஆடினர். பும்ரா. சிராஜ் ஆகிய இருவரது வேகப்பந்து வீச்சில் அதிரடியாக ரன்களைச் சேர்த்தனர். குறிப்பாக, பென் டக்கெட் பவுண்டரிகளாக விளாசினார். இதனால், ஒருநாள் போட்டி போல ஆட்டம் சென்றது.


அணியின் ஸ்கோர் 11.5 ஓவர்களில் 55 ரன்களை எட்டியபோது அதிரடி காட்டிய பென் டக்கெட் அவுட்டானார். அவர் 39 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் சுழலில் அவுட்டானார். இதையடுத்து, ஒல்லி போப் களமிறங்கினார். அவர் 1 ரன் எடுத்த நிலையில் ஜடேஜா சுழலில் அவுட்டானார். மறுமுனையில் நிதானம் காட்டி வந்த ஜாக் கிராவ்லியையும் அஸ்வின் காலி செய்தார். அவர் 40 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.


அடுத்தடுத்து விக்கெட்:


55 ரன்களில் இருந்து 60 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் – ஜானி பார்ஸ்டோ இருவரும் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து நிதானமாக ஆடி வருகின்றனர். 60 ரன்களில் இருந்தபோது ஜோடி சேர்ந்த இவர்கள் கூட்டணி 100 ரன்களை கடந்து ஆடி வருகிறது. ஜோ ரூட் சற்று நிதானமாக ஆட, ஜானி பார்ஸ்டோ துரிதமாக ரன்களை சேர்த்து வந்தார்.


இங்கிலாந்தின் வலுவான பேட்ஸ்மேன்கள் இருவரும் களத்தில் நின்றால் இந்திய அணிக்கு ஆபத்து என்பதால் அவர்களை அவுட்டாக்க இந்திய அணி சுழல் தாக்குதல் நடத்தியது. அதற்கு பலனாக, சிறப்பாக ஆடிய ஜானி பார்ஸ்டோ அக்‌ஷர் படேல் சுழலில் போல்டானார். அவர் 58 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


இந்தியா முனைப்பு:


தற்போது கேப்டன் பென்ஸ்டோக்ஸ் – முன்னாள் கேப்டன் ஜோ ரூட் இணைந்து ஆடினர். இந்திய அணிக்கு ஆபத்தாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட்டை, ஜடேஜா தனது சுழலால் அவுட்டாக்கினார். அவர் 29 ரன்களுக்கு அவுட்டானார். கேப்டன் ரோகித்சர்மா அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல் ஆகிய சுழல் அஸ்திரங்களை கொண்டு தொடர்ந்து இங்கிலாந்து அணியை தாக்க திட்டமிட்டுள்ளார். மைதானத்தில் பந்து சுழலுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் கண்டிப்பாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது வரை அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் படேல் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.