இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஹைதரபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்கியுள்ளது.


டாஸ் வென்ற இங்கிலாந்து:


இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, இங்கிலாந்து அணியின் ஜாக் கிராவ்லி – பென் டக்கெட் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். கேப்டன் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


இன்றைய டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் ஆகியோர் மட்டுமே களமிறங்கியுள்ளனர். இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்‌ஷர் படேல் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளனர். இதனால், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக சுழல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.


சுழல் தாக்குதல் நடத்த இந்தியா வியூகம்:


இந்த மைதானம் சுழல்பந்துவீச்சுக்கு எந்தளவு சாதகமாக இருக்குமோ அதே அளவிற்கு பேட்டிங்கிற்கும் சாதகமாக அமையும். முதலில் பேட் செய்யும் அணியின் முதல் இன்னிங்ஸ் சராசரி 404 என்பதால் இங்கிலாந்து ரன் வேட்டை நடத்த வாய்ப்புகள் அதிகம். அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய அணி சுழல் வியூகத்தை கட்டமைத்துள்ளது.


இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் நேற்றே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டரை பலப்படுத்தும் வகையில் சுப்மன்கில், கே.எல்.ராகுல். ஸ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்பட உள்ளனர். இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக ரோகித்சர்மாவுடன் ஜெய்ஸ்வால் ஆட்டத்தை தொடங்குவார் என்று கருதப்படுகிறது.


பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் மைதானம்:


இங்கிலாந்து அணி தற்போது களமிறங்கியது முதலே அதிரடியாக ஆடி வருகிறது. ஜாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் பவுண்டரிகளாக அடித்து வருகின்றனர். மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் அவர்களுக்கு ரன்கள் எடுக்க சிரமம் இல்லாமல் உள்ளது போல தெரிகிறது. இருப்பினும், நேரம் ஆக ஆக மைதானத்தில் சுழலின் தாக்கம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இங்கிலாந்து அணிக்கு பெரிய பலமாக அந்த அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரரான அவர் இந்த போட்டியில் சிறப்பாக ஆடினால் இந்திய அணிக்கு சவாலாக அமைந்து விடும். அதேபோல, ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்சையும் இந்திய அணி விரைவாக அவுட்டாக்க வேண்டியது அவசியம் ஆகும்.


இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும், 1 டெஸ்ட் போட்டியை டிராவும் செய்துள்ளது. இந்திய அணியின் விக்கெட் கீப்பராக வாய்ப்பு பெற்றுள்ள பரத் இந்த போட்டியில் தனது திறமையை வெளிக்காட்டி தனது வாய்ப்பை தொடரச் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


அணி விவரம்:


இந்திய அணியின் விவரம்: கேப்டன் ரோகித்சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன்கில், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, ஸ்ரீகர் பரத் ( விக்கெட் கீப்பர்), அஸ்வின், அக்‌ஷர் படேல், பும்ரா, சிராஜ்.


இங்கிலாந்து அணி: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், ரெஹன் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேக் லீச்