இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித்சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அவரது தேர்வுக்கு கைமேல் பலன்கிட்டியது என்றே சொல்லலாம். பும்ரா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலே ஜேசன் ராய் டக் அவுட்டானார். அதே ஓவரில் ஜோ ரூட்டும் டக் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஆல் ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் ஷமி பந்தில் தான் சந்தித்த முதல் பந்திலே கோல்டன் டக் ஆனார். டெஸ்ட் போட்டியில் அசத்திய ஜானி பார்ஸ்டோ 7 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழக்க, லிவிங்ஸ்டனையும் பும்ரா டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். 26 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் மொயின் அலி சிறிது நேரம் கூட்டணி அமைத்தது. அணியை மீட்க இருவரும் பெரிய இன்னிங்ஸ் ஆட நினைத்து நிதானமாக ஆடினர். ஆனாலும், 26 ரன்களில் சேர்ந்த இந்த கூட்டணியை பிரசித் கிருஷ்ணா பிரித்தார். அவர் பந்தில் 18 பந்தில் 2 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்த மொயின் அலி அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கேப்டன் பட்லரும் 6 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
68 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணிக்கு டெயிலெண்டர்களான டேவிட் வில்லியும், ப்ரைடன் கார்சும் ஓரிரு ரன்களாக திரட்டினர். இதனால், அந்த அணி 100 ரன்களை கடந்தது. பின்னர், மீண்டும் பந்துவீச வந்த பும்ரா ப்ரைடன் கார்சை 15 ரன்களிலும், டேவிட் வில்லியை 21 ரன்களிலும் அவுட்டாக்கினார். இதனால், இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு சுருண்டது. 26 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 110 ரன்கள் குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் பும்ரா அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்