IND Vs CAN, T20 Worldcup: ஐசிசி டி-20 உலகக் கோப்பையில் கனடா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில்,  இந்திய அணியில் கோலிக்கு ஓய்வளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


ஐசிசி டி-20 உலகக் கோப்பை:


ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில், இன்று கனடாவை எதிர்கொள்கிறது.


இந்தியா - கனடா மோதல்:


இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதும் போட்டி, ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்திய அணி ஏற்கனவே விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் வென்று, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் இன்றைய போட்டி வெறும் சம்பிரதாயமாகவே கருதப்படுகிறது. இருப்பினும், லீக் சுற்றை வெற்றியுடன் முடிக்க இந்தியா தீவிரம் காட்டுகிறது. கனடா அணி ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


இந்திய அணியில் கோலிக்கு ஓய்வா?


விராட் கோலி வழக்கத்திற்கு மாறாக இந்த டி-20 உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வருகிறார். ஆனால், இதுவரை 3 போட்டிகளில் விளையாடி வெறும் 5 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இந்நிலையில், கனடா அணிக்கு எதிரான போட்டியின் முடிவுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால், மூத்த வீரர்களுக்கு ஓய்வளித்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கோலிக்கு பதிலாக ஜெய்ஷ்வாலை இன்றைய போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கப்படலாம். அது வெற்றிகரமாக அமைந்தால், சூப்பர் 8 சுற்றில் கோலியை மீண்டும் 3வது வீரராக களமிறக்கலாம் என இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது. ரோகித் மற்றும் கோலி ஆகிய இருவருமே, ரன் குவிக்க தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். சூப்பர் 8 சுற்றில் இதே நிலை தொடர்ந்தால், அணி பின்னடைவை சந்திக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 


உத்தேச இந்திய அணி:


ரோகித் சர்மா, ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன்,  சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்