வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது, முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வழக்கமாக இந்திய அணி கேப்டன் மட்டுமின்றி துணை கேப்டனும் சமீபகாலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

துணை கேப்டன் யார்?


ஆனால், இந்த டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக ரோகித்சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் துணை கேப்டன் யார்? என்று  அறிவிக்கப்படவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டது முதலே பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இந்த நிலையில், எதிர்வர உள்ள  வங்கதேச டெஸ்ட் தொடருக்கும் துணை கேப்டன் அறிவிக்கப்படவில்லை. சமீபகால டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாக பும்ராவே பதவி வகித்து வருகிறார். ஆனால், இந்த முறை துணை கேப்டன் பதவிக்கு பும்ராவுடன் சேர்ந்து கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் ஆகியோரும் துணை கேப்டன் பதவிக்கு போட்டியில் உள்ளனர். இவர்களுடன் இளம் வீரர் சுப்மன்கில்லும் துணை கேப்டன் பதவியில் போட்டியில் உள்ளார்.


மல்லுக்கட்டும் வீரர்கள்:


ரோகித்சர்மா இன்னும் சில வருடங்கள் மட்டுமே டெஸ்ட் போட்டிகள் ஆடுவார் என்பதால் புதிய கேப்டனை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பும்ரா, கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் மற்றும் சுப்மன்கில் ஆகியோரில் பும்ரா மற்றும் கே.எல்.ராகுல் இருவருக்குமே அதிக அனுபவம் உள்ளது. இவர்கள் இருவருக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்திய அனுபவமும் உண்டு.


ஆனால், பயிற்சியாளர் கம்பீர் துணை கேப்டனாக யாரை முன்னிறுத்துவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து அணியை திறம்பட சில ஆண்டுகள் வழிநடத்தும் விதமாக புதிய கேப்டனை உருவாக்கும் நோக்கில் இவர்கள் 4 பேரில் ஒருவரை துணை கேப்டனாக அணி நிர்வாகம் நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

சுப்மன்கில்லுக்கு முன்னுரிமை:


இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு துணை கேப்டனாக சுப்மன்கில் நியமிக்கப்பட்டார். டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், இந்திய அணியின் துணை கேப்டனாக அந்த தொடரில் ஆடியவருமான முன்னாள் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கே கேப்டன் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.