இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கு பிறகு இந்திய அணி வங்கதேச அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்திய அணி அறிவிப்பு:
இந்த நிலையில், இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் விவரம் கீழே வருமாறு:
ரோகித் சர்மா( கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன்கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்ப்ராஸ் கான், ரிஷப்பண்ட் ( விக்கெட் கீப்பர்), துருவ் ஜோயல் ( விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா, யஷ் தயாள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அனுபவ வீரர்களான ரோகித்சர்மா, விராட் கோலி, ஜடேஜா, பும்ரா, அஸ்வின், சிராஜ் ஆகியோருடன் இளம் வீரர்களான சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல், யஷ் தயாள் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கம்பேக் தந்த ரிஷப்பண்ட்:
26 வயதான ரிஷப்பண்ட் விபத்தில் சிக்குவதற்கு முன்பு கடைசியாக 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தார். விபத்தில் சிக்கிய பிறகு கம்பேக் தந்துள்ள ரிஷப்பண்ட் மீண்டும் தனது டெஸ்ட் பயணத்தை வங்கதேசத்திற்கு எதிராகவே துவங்க உள்ளார்.
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கம்பேக் தரும் ரிஷப்பண்ட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டி20, ஒருநாள் போட்டிகள், ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக ஆடியது போல டெஸ்ட் போட்டிகளிலும் தனது கம்பேக்கை அவர் தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சவால் அளிக்குமா வங்கதேசம்?
இளம் வீரரான ஜெய்ஸ்வால், சுப்மன்கில், சர்ப்ராஸ்கான், துருவ் ஜோயல் ஆகியோருக்கு தங்களை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா – வங்கதேம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுக்கு சவால் அளித்து புள்ளிப்பட்டியலில் முன்னேற வங்கதேசம் முனைப்பு காட்டும். சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் வென்று வங்கதேசம் புது வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.