IND Vs BAN,T20 Worldcup: ஐசிசி உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில், இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இன்று மோத உள்ள போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.


ஐசிசி டி-20 உலகக் கோப்பை:


ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்ற நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.  அவை குரூப்-1 மற்றும் குரூப் 2 என பிரிக்கப்பட்டு தற்போது போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.


இந்தியா - வங்கதேசம் மோதல்:


இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி, ஆண்டிகுவா & பார்புடாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் விளையாடும். அதன் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி விளையாடியுள்ள ஒரு போட்டியில் வெற்றியையும், வங்கதேச அணி ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளது.  


பலம், பலவீனங்கள்:


இந்திய அணி சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேநேரம், மிகவும் எதிர்பர்க்கப்படும் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் கோலி ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இனி வரும் போட்டிகள் மேலும் மேலும் கடினமாக இருக்கும் என்பதால், இந்த இரண்டு வீரர்களும் ரன் குவிப்பது இந்திய அணிக்கு அவசியமாகும். ஷிவம் துபேவும் இதுவரை ஒரு போட்டியில் கூட ஜொலிக்கவில்லை. பந்துவீச்சு தான் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கிய பலமாக உள்ளது. சில போட்டிகளில் பேட்டிங் மொத்தமாக சொதப்பினாலும் கூட, பவுலிங் யூனிட் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. இதே ஃபார்மை தொடர்ந்தால் இன்றைய போட்டியிலும் இந்திய அணியால் வெற்றி பெறமுடியும்.


வங்கதேச அணியை பொறுத்தமட்டில், நடப்பு உலகக் கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஓரளவிற்கு சுமாராகவே செயல்பட்டு வருகிறது. அதேநேரம் இந்தியாவுடன் பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் இன்றைய போட்டியில் அவர்களுக்கு உதலாம். எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, ஒட்டுமொத்த கூட்டு முயற்சியை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இன்றய போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி அரையிறுதிக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.


நேருக்கு நேர்:


சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 12 முறையும், வங்கதேசம் அணி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.


உத்தேச அணி விவரங்கள்:


இந்தியா : ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் , சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்


வங்கதேசம் : தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹிரிதாய், மஹ்முதல்லா,  மஹேதி ஹாசன், ரிஷத் ஹொசைன், டஷ்கின் அஹ்மத்,டன்ஷிம் ஹசன் ஷகிப், முஷ்தபிசுர் ரஹ்மான்