டி20 உலகக் கோப்பை:
ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றில் விளையாடி வருகின்றன.அந்த வகையில் இன்று (ஜூன் 21) நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டேரன் சமி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா:
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரீஷா ஹென்றிக்ஸ் மற்றும் குயின்டன் டி காக் களம் இறங்கினார்கள். இருவரும் அந்த அணிக்கு அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டே 86 ரன்களில் தான் விழுந்தது. ரீசா விக்கெட் இழந்த பின் கிளாசன் களம் இறங்கினார்.மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த டி காக் 65 ரன்களில் விக்கெட்டானார்.
பின்னர் வந்த டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடிக்கொண்டிருக்க இடையே கிளாசன் 8 ரன்களில் நடையைக்கட்டினார். 28 பந்துகள் களத்தில் நின்ற டேவிட் மில்லர் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 48 ரன்கள் விளாசினார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்தது.
த்ரில் வெற்றி:
இங்கிலாந்து அணி 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் களம் இறங்கினார்கள். பிலிப் சால்ட் 8 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று 11 ரன்களில் நடையைகட்டினார். அடுத்து வந்த பயர்ஸ்டவ் 16 ரன்களில் விக்கெட்டானார்.
இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய மொயின் அலி 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க ஹாரி புருக் மட்டும் அதிரடியாக விளையாடி 53 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.