ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


அடுத்ததாக, அக்டோபர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது இந்திய அணி. அதேபோல், கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி மோதியது.


இந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில்,  தொடர்ந்து மூன்று ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற இந்திய அணி அக்டோபர் 19 ஆம் தேதி வங்கதேச அணியுடன் மோத இருக்கிறது. முன்னதாக புள்ளிப்பட்டியலிலும் 6 புள்ளிகளுடன் இந்திய அணி தான் முதல் இடத்தில் இருக்கிறது.


ஹாட்ரிக் சதம் அடிப்பாரா ரோகித்?


இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த இரண்டு உலகக் கோப்பை போட்டியிலும் வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.  கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணி காலிறுதியில் மோதியது.


இந்த போட்டியில், ரோகித் சர்மா 126 பந்துகளில் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 137 ரன்கள் அடித்தார். முன்னதாக அந்த போட்டியில் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.


அதேபோல், கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், 40 வது லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது இந்திய அணி.


இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் 92 பந்துகளில்  7 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 104 ரன்கள் அடித்தார் ரோகித் சர்மா.


இதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக இரண்டு முறை தொடர்ந்து சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா.


முன்னதாக, ஒரு அணிக்கு எதிராக மூன்று சதங்களை தொடர்ந்து அடித்த வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் படைத்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் 2007, 2011 மற்றும் 2015 உலகக் கோப்பைகளில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.


இந்தசூழலில் தான் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டியில் ரோகித் சர்மா ஹாட்ரிக் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


மேலும் படிக்க: ICC ODI World Cup 2023: பிறந்தது தென்னாப்பிரிக்கா.. விளையாடுவது நெதர்லாந்து.. தாய்நாட்டிற்கு எதிராக விளையாடும் தலைமகன்கள்!


 


மேலும் படிக்க: Kagiso Rabada: ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்... சாதனை பட்டியலில் இடம் பிடித்த ககிசோ ரபாடா!