உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் சுவாரஸ்யமான நடைபெற்று வருவதால், நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறி வருகின்றது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கி அதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் புள்ளிப்பட்டியலில் நாள்தோறும் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்து வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகி வருகின்றனர். இது இல்லாமல் சிறிய அணிகளாக கூறப்படும் அணிகள் பலமான அணிகளை வீழ்த்தி வருதால் தொடரின் சுவாரஸ்யம் ரசிகர்கள் மத்தியில் உலகக் கோப்பைத் தொடர் குறித்த பேச்சுகளை அதிகமாக்கியுள்ளது.
இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 19ஆம் தேதி இந்தியா மற்றும் வங்காள தேச அணிகள் புனேவில் உள்ள மஹாராஷ்ட்ரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்காள தேச அணி தனது பேட்டிங்கினை நிதானமாகவே தொடங்கியது.
சிறப்பான முறையில் ரன்கள் சேர்த்து வந்த வங்காள தேசத்தின் தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ் மற்றும் டன்சித் ஹசன் கூட்டணி சிறப்பான முறையில் ரன்கள் சேர்த்து விளையாடி வந்தது. இவர்களின் விக்கெட்டினை பவ்ர்ப்ளேவிலேயே இந்திய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி பந்து வீச்சாளர்களால் முடியவில்லை. பவர்ப்ளேவின் 9வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்படவே அவர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பாட்டார். அதன் பின்னர் அந்த ஓவரில் மீதம் இருந்த மூன்று பந்துகளை விராட் கோலி வீசினார்.
சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடி வந்த டன்சித் ஹசன் தனது விக்கெட்டினை 51 ரன்களில் குல்தீப் பந்தில் ஆட்டம் இழந்தார். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் வந்த வங்காள தேசத்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனகள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தாலும், லிட்டன் தாஸ் பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்து வந்தார். ஒரு கட்டத்தில் லிட்டன் தாஸ் 66 ரன்களில் தனது விக்கெட்டினை இழக்க, வங்கள தேச அணியின் ரன்ரேட் குறையத் தொடங்கியது.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய முஸ்தஃபிகுர் ரஹிம் நிதான ஆட்டத்தால் வங்காள தேச அணி 200 ரன்களைக் கடக்க உதவியது. அதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்கள் முடிந்ததால், வங்காள தேச வீரர்கள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய ஓவர்களில் ரன்கள் சேகரிக்கத் தொடங்கினர். குறிப்பாக ஷர்துல் தக்குரின் ஓவரில் பவுண்டரிகளையும் சிக்ஸ்ர்களையும் விளாசுவதில் குறியாக இருந்தனர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் வங்காள தேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளும், சிராஜ், பும்ரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். வங்காள தேச அணி தரப்பில் லிட்டன் தாஸ் 66 ரன்களும், டன்சித் ஹசன் 51 ரன்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனகளான முஸ்தஃபிகுர் 38 ரன்களும் மகமதுல்லா 46 ரன்களும் சேர்த்தனர்.