இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்றது. 


இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று டாக்கா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற ஏதுவாக இருக்கும். இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 


யார் கேப்டன்..?


வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஸ்லிப்பில் பீல்டிங் செய்யும் போது ரோஹித் சர்மாவின் கட்டை விரலில் மோசமான காயம் ஏற்பட்டது. அதனால் காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் இருந்து விலகினார். கேஎல் ராகுல் கேப்டனாகவும், சேட்டேஷ்வர் புஜாரா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா இன்னும் விளையாட தகுதியற்ற நிலையில், கேஎல் ராகுல் மீண்டும் மிர்பூரில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.


இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஈடுபட்டிருந்த இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுலுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காயம் காரணமாக நாளை தொடங்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை கேஎல் ராகுல் விளையாடவில்லை என்றால், இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ள புஜாரா தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியா அபார ஃபார்ம்:


முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சட்டோகிராமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 


2வது இன்னிங்சில் 513 ரன்கள் இந்திய அணி இலக்கு வைத்திருந்தது. ஆனால் வங்க தேச அணி 324 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சாகிர் ஹசன் 100 ரன்களும் ஷகிப் 84 ரன்களும் ஷாண்டோ 67 ரன்களும் அடித்தனர். 


இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்ட நேர முடிவில்,  வங்க தேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்து இருந்தது. அதையடுத்து, கடைசி நாள் ஆட்டம் தொடங்கியதும் மெஹிதி ஹாசன் 13 ரன்களில்  சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  நிதானமாக விளையாடிய ஷகிப் அல் - ஹசன் 84 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக, 324 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


இன்று தொடக்கம்:


இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, அக்சர் படேல் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. 


காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 3, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளன.