இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ், தனது அறிமுக ஆட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஐம்பது அல்லது அதற்கு மேல் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட்:
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.முதல் ஓவரிலேயே நிசாங்கா 1 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், கருணரத்னே - சண்டிமாஸ் கூட்டணி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
நிதானமாக விளையாடிய கருணரத்னே 109 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் மேத்யூஸ் - சண்டிமாஸ் இணை நியூசிலாந்து பவுலர்களை ஒரு கை பார்த்தது. இவர்களை வீழ்த்த முடியாமல் நியூசிலாந்து பவுலர்கள் சோர்ந்து போயினர்.
சிறப்பாக ஆடிய சண்டிமாஸ் 208 பந்துகளில் 16 பவுண்டரிகள் உட்பட 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் மேத்யூஸ் - கமிந்து மெண்டிஸ் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் ரன் குவிப்பை தீவிரப்படுத்தினர். இதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை சேர்த்தது. கடைசி நேரத்தில் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் 56 பந்துகளில் ஒரு சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 51 ரன்கள் விளாசினார். அதேபோல் மேத்யூஸ் 166 பந்துகளில் 78 ரன்களை சேர்த்துள்ளார்.
உலக சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்:
இந்தப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலமாக இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை படைத்தார். அதாவது, தனது அறிமுக ஆட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஐம்பது அல்லது அதற்கு மேல் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி விளையாடி வருகிறது. அதன்படி களத்தில் கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் நிற்கின்றனர். இதில் கமிந்து மெண்டிஸ் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஷர் உட்பட மொத்தம் 112 ரன்கள் விளாசி விளையாடி வருகிறார். முன்னதாக ஜூலை 2022-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கமிந்து மெண்டிஸ் அந்தப் போட்டியில் 61 ரன்களை எடுத்தார். அதன் பிறகு 102,164, 92 நாட் அவுட், 113, 74, 64,114,51 என்று தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் ஏதாவது ஒரு இன்னிங்ஸிலாவது அரைசதம் அடிக்காமல் அவர் அவுட் ஆனதில்லை.