வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


இந்திய அணி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான முதல் போட்டியானது நேற்று வங்கதேசத்தில் உள்ள டாக்கா மைதானத்தில் பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியை வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


இந்தியா சொதப்பல்:


வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பேட்டிங் செய்தது. எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.  31 பந்துகளில் 27 ரன்கள் அடித்து நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ஷகீப் வீசிய 11 வது ஓவரில் க்ளீன் போல்டானார். அவரை தொடர்ந்து விராட் கோலியும் 9 ரன்களில் அவுட்டானார். 


41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய கிரிக்கெட் அணி 186 ரன்களில் சுருண்டது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 73 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்களும் எடுத்தனர்.
தவன், கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


மெஹதி ஹாசன் அபாரம்:


வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 10 ஓவர்கள் வீசி  36 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்தபடியாக எபாடாட் ஹுசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, விளையாடிய வங்கதேச அணி தொடக்கத்தில் தடுமாறியது. எனினும், கேப்டன் லிட்டன் தாஸ் 41 ரன்கள் அடித்து அசத்தினார். அவரை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.


மற்றொரு முக்கியமான விக்கெட்டான ஷாகிப் அல் ஹசனின் விக்கெட்டையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.
அந்த கேட்சை அசத்தலாக டைவ் அடித்து பிடித்தார் முன்னாள் கேப்டன் கோலி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனினும், பின்னர் ஹசன் மிராஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று விளையாடி 38 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.


இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 3 விக்கெட்டுகளை சுருட்டினார். குல்தீப் சென், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.


அபராதம்: 


இந்த சோகம் முடிவதற்குள்ளாக, இந்தியா அணிக்கு மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதமாக சம்பவம் நடந்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட்டை உபயோகித்தாக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் முன்மொழியப்பட்ட அனுமதியை ஏற்றுக்கொண்டார். எனவே முறையான விசாரணை தேவையில்லை என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


 இந்திய அணி இலக்கை விட 4 ஓவர்கள் குறைவாக உள்ளதால் போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலே இந்த தடையை விதித்தார். அதேபோல், கள நடுவர்கள் மைக்கேல் கோஃப் மற்றும் தன்வீர் அகமது, மூன்றாவது நடுவர் ஷர்புத்தூலா இப்னே ஷாஹித் மற்றும் நான்காவது நடுவர் காசி சோஹல் ஆகியோர் இந்திய அணி மெதுமாக பந்து வீசியதாக குற்றம் சாட்டினர். " என்று ஐசிசி தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச ஓவர்-ரேட் குற்றங்கள் தொடர்பான ஐசிசி நடத்தை விதிமுறைகள்  விதி 2.22ன் படி , வீரர்கள் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.