இந்திய டி20 அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிப்பது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்தியாவின் டி20 பார்மெட்டுக்கு மட்டும் தனி பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்திய டி20 அணிக்கான புதிய பயிற்சியாளர் தலைமையிலான இந்திய படை வருகின்ற ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளரின் கீழ் இந்திய அணியினர் வருகிற ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா, இந்திய டி20 அணியின் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த வரிசையில் இந்திய டி20 அணிக்கு புதிய பயிற்சியாளரும் நியமிக்கப்பட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு வழக்கம்போல் செயல்படுவார். அதேநேரத்தில் டி20 போட்டிகளுக்கு மட்டும் தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட இருக்கிறார்.
இருப்பினும், தற்போதுவரை யார் பெயரை பிசிசிஐ பரிசீலிக்கவில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா டி20 கேப்டன்: இந்தியாவின் புதிய டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஜனவரியில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் மூலம் களமிறங்குவார். இதில் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இனி இந்தியாவின் டி20 போட்டிகளில் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
அதேபோல், இந்திய அணியின் அனுபவ வீரர்களான முகமது ஷமி, ரவிசந்திரன் அஷ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்திய டி20 அணியில் இடம்பெற மாட்டார்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்படுவதால், தொடரில் இருந்து விலக உள்ளார்.
ஜனவரிக்கு பிறகு மூன்று பார்மேட் கேப்டன்கள் யார் யார்..?
- டி20 கிரிக்கெட்: இலங்கை தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா இந்திய கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார்.
- ஒருநாள் கிரிக்கெட்: அடுத்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா ஒருநாள் அணியின் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டெஸ்ட் கேப்டன்: வரும் உலக டெஸ்ட் சாம்பியன் தொடர் வரை ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியான தகவலின்படி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 3 வடிவிலான கிரிக்கெட் அணியிலும் பயிற்சியாளராக இருந்து வருவதால், அவரது பணி சுமை அதிகமாக உள்ளதாக பிசிசிஐ கருதுகிறது. இதனால், பயிற்சியாளர்கள் பதவிகளை பிரிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. அதன் அடிப்படையில், முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியை டி20 வடிவத்தில் மட்டும் இயக்குனராக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தோனியின் திறமைகளை பயன்படுத்தி இந்திய கிரிக்கெட் அணியின் தரத்தை உயர்த்தவும், இளம் வீரர்களின் திறமையை வெளிகொண்டு வரலாம் என்று பிசிசிஐ நம்பிக்கை கொண்டுள்ளது. அறிக்கையின்படி, இந்த மாத இறுதியில் பிசிசிஐ தலைமை கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.