உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது. 444 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு போட்டியின் கடைசி நாளில் வெற்றி பெற 280 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கோலி 49 ரன்களிலும், ரகானே 46 ரன்களிலும் ஆட்டமிழக்க, அவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 234 ரன்களை சேர்ப்பதற்குள் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக 2021ம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை கண்டது குறிப்பிடத்தக்கது.
5வது நாள் போட்டி:
கடைசி நாள் ஆட்டத்தில் 46 வது ஓவரின் 3 வது பந்தில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல், அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முதல் இன்னிங்ஸில் ஜடேஜா 48 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு, ரகானே மற்றும் கே.எஸ்.பரத் இணை, இந்தியாவை சரிவில் இருந்து மீட்க போராடியது. நிதானமாக விளையாடி வந்த ரகானே 46 ரன்கள் சேர்த்து இருந்தபோது, மிட்செல் ஸ்டார்க் பந்தில் நடையை கட்டினர்.. இதனைத் தொடர்ந்து வந்த இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதன் காரணமாக இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 209 வித்தியாசத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
போட்டி சுருக்கம்:
லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வெறும் 296 ரன்களுக்கு சுருண்டது. இதனால், 173 ரன்கள் என்ற முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 270 ரன்கள் சேர்த்து இருந்தபோது தனது இன்னிங்ஸை அந்த அணி டிக்ளேர் செய்தது. 444 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, வெறும் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளைம் இழந்தது. இதனால் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற இந்திய அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை கோட்டைவிட்டது. இந்த போட்டியை வென்றதன் மூலம், அனைத்து ஐசிசி தொடர்களையும் வென்ற அணி என்ற பெருமையை ஆஸ்திரேலிய அணி பெற்றது.