ஐசிசி தரப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.  லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது.


முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களை எதிர்கொண்டு 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வெளிச்சமின்மை காராணமாக போட்டி நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹெட் 156 பந்தில்  146 ரன்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில்  95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 


இரண்டாவது நாளின் தொடக்கத்திலேயே ஸ்மித் தனது சதத்தினை எட்ட, இக்கட்டான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியை மீட்ட இருவரும் சதம் விளாசி இந்திய அணிக்கு சவால் அளித்தனர். 150 ரன்களை அதிரடியாக கடந்த டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டை 163 ரன்களை எட்டிய போது முகமது சிராஜ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த கிரீன் 6 ரன்னில் வெளியேற, இந்தியாவின் கரம் சற்று ஓங்குவதாக தெரிந்தது. அதன் பின்னர் ஸ்மித் விக்கெட்டை ஷ்ர்துல் தாக்கூர் கைப்பற்ற, போட்டி இந்தியா பக்கம் வந்ததாக தெரிந்தது. ஆனால் கேரி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணி 450 ரன்களை கடக்க உதவினார். 48 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேற, இறுதியில் 469 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது.


அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணிக்கு பவுலிங்கைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் சொதப்பல் தொடர்ந்தது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னிலும், கில் 13 ரன்னிலும், விராட் கோலி மற்றும் புஜாரா தலா 14 ரன்னிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 


அதன் பின்னர் இணைந்த ரஹானே ஜடேஜா ஜோடி நிதனாமாக ஆடியது. அரைசதத்தினை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 51 பந்தில் 48 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.  இதனால் இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி அதிகமானது. இறுதியில் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ரஹானே 29 ரன்னிலும், பரத் 5 ரன்னிலும் உள்ளனர். இரண்டாவது நாள் முடிவின் படி இந்திய அணி 318 ரன்கள் பின் தங்கியுள்ளது.