உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் முகமது சிராஜ் பந்து வீச ஓடிவரும் போது ஸ்மித் ஸ்டெம்பில் இருந்து நகர, பந்தை ஸ்டெம்பை நோக்கி எறிந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐசிசி தரப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 76 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில், கைகோர்த்த ஸ்மித் மற்றும் ஹெட் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக மீட்டனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களை எதிர்கொண்டு 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வெளிச்சமின்மை காராணமாக போட்டி நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹெட் 156 பந்தில் 146 ரன்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில் 95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதன் பின்னர் இரண்டாவது நாள் ஆட்டத்தினை தொடங்கிய இவர்கள் இருவரில், முதல் பந்தினை எதிர்கொண்ட ஹெட் சிங்கிள் எடுக்க, இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விளாசினார் ஸ்டீவ் ஸ்மித். இதன் மூலம் தனது சதத்தினை நிறைவு செய்த ஸ்மித் நான்காவது பந்தை எதிர்கொள்ள, தயாராக இருந்தார், இந்த ஓவரை வீசிய முகமது சிராஜ் பந்தை வீசுவதற்கு ஓடி வந்தார், இந்நிலையில் ஸ்மித் மைதானத்தில் இருந்த ஸ்பைடர் கேமரா பேட்டிங் செய்ய தொந்தரவாக இருந்ததால் ஸ்டெம்பில் இருந்து நகர்ந்தார். ஆனால் அப்போது சிராஜ் பந்தை வீச ஏதுவான இடத்திற்கு வந்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிராஜ் பந்தை ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஸ்மித், சிராஜின் நடவடிக்கையால் ஆச்சரியப்பட்டார். உடனே சிராஜ் நான் பந்தை வீச ஓடி வருவதற்கு தயாராக இருந்த போதே கூறவேண்டியது தானே என்பது போல சைகை காட்டினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் இருந்த இருவரும் சதம் விளாசி நிலையாக ஆடிவந்தனர்.