உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 இறுதி கட்டத்தினை எட்டிவிட்ட நிலையில், கோப்பையை யார் வெல்வார்கள் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானாத்தில் 2011 உலகக் கோப்பை கால் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியது. இந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதகாம ஆஸ்திரேலியா களம் இறங்கும் என ஆஸ்திரேலியா ரசிகர்களும் 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியதற்கும் இந்தியா பதிலடி கொடுத்து தனது மூன்றாவது கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்களும் நம்பிக்கையாக உள்ளனர். இந்நிலையில் போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம். 


சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். 1982 ஆம் ஆண்டு குஜராத்தில் கிரிக்கெட் விளையாடும் இளம் திறமைசாலிகளை வளர்க்கும் வகையில் இந்த மைதானம் கட்டப்பட்டது. இந்த மைதானத்திற்கு 1982 முதல் 2021ஆம் ஆண்டு வரை சர்தார் பட்டேல் மைதானம் என்ற பெயர்தான் இருந்தது. இந்த மைதானத்தில் 49,000 கிரிக்கெட் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது.  


அக்டோபர் 2015 இல், குஜராத் கிரிக்கெட் சங்கம், அப்போதை குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த, தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்த மைதானத்தை புனரமைத்து உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக மாற்ற முடிவு செய்தது. பிப்ரவரி 2020 இல், மறுவடிவமைப்பு பணி முடிந்தது, இப்போது 1.3 லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசிக்கும் அளவிற்கு இந்த மைதானம் உருவெடுத்துள்ளது. இதற்கு முன்னர் 90,000 பார்வையாளர்கள் பார்க்கும் திறன் கொண்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்தான் உலகின் மிகப்பெரிய மைதானமாக இருந்தது.  இதனை நரேந்திர மோடி மைதானம் முறியடித்து  சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள மைதானங்களில் மிகவும் முக்கியமான மைதானமாக  இந்த மைதானம் இடம் பெற்றுள்ளது. 


மைதானத்தின் சில முக்கிய அம்சங்கள் 



  • 63 ஏக்கர் பரப்பளவில் 4 நுழைவு வாயில்களைக் கொண்டுள்ளது. 

  • மைதானத்தின் அளவு 180 யார்டு X 150 யார்டு

  • அனைத்து வசதிகளை உள்ளடக்கிய 4 அணிகள் பயன்படுத்தக்கூடிய ட்ரெஸ்ஸிங் ரூம்

  • 6 உட்புற பயிற்சி மைதானங்கள் மற்றும் 3 வெளிப்புற பயிற்சி மைதானங்கள்

  • 40 விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதியுடன் உள்ளரங்கு கிரிக்கெட் அகாடமி

  • தலா 25 பேர் அமர்ந்து போட்டியைக் காணும் அளவுக்கு 76 கார்ப்பரேட் இருக்கைகள் 


அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள்



  • 1986-87ல் பாகிஸ்தானுக்கு எதிராக, சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்தார், மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

  • பிப்ரவரி 1994 இல், கபில் தேவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 432வது விக்கெட்டை வீழ்த்தி சர் ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை முறியடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

  • 8 பிப்ரவரி 1994 அன்று, சாகி லக்ஷ்மி வெங்கடபதி ராஜு இலங்கைக்கு எதிராக 11 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

  • 2008 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணத்தின் இரண்டாவது டெஸ்டில் ஏபி டி வில்லியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார்.

  • 2011 ஐசிசி உலகக் கோப்பையில், இந்திய அணி காலிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, நரேந்திர மோடி மைதானத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

  • 2013ல், நரேந்திர மோடி மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெற்றார்.

  • 24 பிப்ரவரி 2020 அன்று, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அமெரிக்க ஜனாதிபதி தடொனால்ட் டிரம்பின் வரவேற்பு நிகழ்ச்சியான “நமஸ்தே டிரம்ப்” நடைபெற்றது.