மேற்கிந்திய தீவுகள் நாட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி யஷ் துல் தலைமையில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடர் தொடங்கியது முதலே சிறப்பாக ஆடி வந்த இந்திய அணி காலிறுதி போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.




இதையடுத்து, ஆண்டிகுவா மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை சந்தித்தது இந்தியா. முதலில் டாஸ் வென்ற இந்திய அண்டர் 19 அணியின் கேப்டன் யஷ் துல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஹர்னூர் சிங் களமிறங்கினர். 


30 பந்துகள் வரை நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அங்கிரிஷ், வில்லியம் வீசிய 8 வது ஓவரில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சியளித்தார். அதேபோல், அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய ஹர்னூர் சிங் 16 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஷேக் ரஷீத் மற்றும் கேப்டன் யஷ் துல் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதற விட்டனர். இந்த ஜோடி அடுத்த விக்கெட் இழப்பிற்கு 204 பாட்னர்ஷிப் அமைத்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தி, தொடர்ந்து சதம் கடக்க முயற்சி மேற்கொண்டனர். 


இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் கேப்டன் யஷ் துல் சதம் கடந்து மிரட்டினார். இவரை தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஷீத் 94 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னால் வந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 13 ரன்களில் வெளியேற, விக்கெட் கீப்பர் தினேஷ் பானா நான்கு பந்துகளில் தலா 2 பௌண்டரி, 2 சிக்ஸர் அடிக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தது. 




291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பவே அதிர்ச்சி. அந்த அணியின் தொடக்க வீரர் டீக் வில்லி 1 ரன்களில் வெளியேற, அடுத்துவந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக லச்லன் ஷா மட்டும் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தார். மற்ற வீரர்கள் யாரும் 40 ரன்கள் கூட எடுக்கவில்லை. இதையடுத்து 41.5 ஓவர்களில் 194 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆஸ்திரேலியா அணி அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவியது. 




இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கி ஓஸ்ட்வால் 3 விக்கெட்களும், ரவி குமார் மற்றும் நிஷாந்த் தலா 2 விக்கெட்களும், கௌஷல் மற்றும் அங்கிரிஷ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதம் அடித்த கேப்டன் யஷ் துல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


அண்டர் 19 உலகப்கோப்பை தொடரில் தொடர்ந்து நான்காவது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண