டெஸ்ட் கிரிக்கெட் அணிகளிலே ஜாம்பவான் அணிகளாகிய இந்தியாவும் – ஆஸ்திரேலியாவும் 4 போட்டிகள் கொண்ட தொடரில் மோதிக்கொள்ள உள்ளன. பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி வரும் 9-ந் தேதி தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது.


நாக்பூரில் தொடங்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ரசிகர்களின் கண்கள் அனைத்தும் விராட்கோலியின் பக்கமே உள்ளது. ஏனென்றால், தன் மீதான விமர்சனங்கள் அனைத்திற்கும் கடந்த ஆசிய கோப்பை தொடர் முழுவதும் தனது பேட்டால் பதிலளித்து வந்த விராட்கோலி இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளில் 2 சதம் அடித்து தான் எப்போதும் கிங் என்பதை மீண்டும் நிரூபித்தார்.




சதங்கள் மூலம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது கம்பேக்கை முத்திரை பதித்தார். ஆனாலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலியின் சத தாகம் மட்டும் இன்னும் தீரவில்லை. விராட்கோலி கடைசியாக 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஈடன்கார்டன் மைதானத்தில் வங்காளதேச அணிக்கு எதிராக சதம் விளாசியிருந்தார்.


அதற்கு பிறகு 20 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள விராட்கோலி 36 இன்னிங்சில் பேட் செய்துள்ளார். ஆனால், 6 அரைசதங்கள் மட்டுமே விளாசியுள்ளார். அதிகபட்சமாக 79 ரன்களை எடுத்துள்ளார். விராட்கோலியின் திறமைக்கு ஒரு சதம் அடிக்க 20 டெஸ்ட்கள் எடுத்துக்கொண்டது என்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையான விஷயமாகவே கருதப்படுகிறது.




இந்த நிலையில், விராட்கோலி அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தனது 3 ஆண்டுகால சத தாகத்தை தணித்துக் கொள்வார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஏனெ்னறால், விராட்கோலியின் பேட்டிங் பார்ம் தற்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி விராட்கோலிக்கு மிகவும் பிடித்த அணிகளில் ஆஸ்திரேலியாதான் முதன்மையான அணி ஆகும்.


விராட்கோலி இதுவரை 20 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடி அதில் 7 சதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 169 ரன்களை குவித்துள்ளார். விராட்கோலி டெஸ்ட் சதம் விளாசிய அணிகளிலே இரட்டை சதம் விளாசாத அணி ஆஸ்திரேலிய அணி மட்டுமே ஆகும்.  ஆனாலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராகத்தான் அதிக சதங்களை விளாசியுள்ளார்.


அவரது பேட்டிங் பார்ம் தற்போதுள்ள நிலையில் எதிர்வரும் 4 டெஸ்ட் போட்டிகளில் அவர் தனது டெஸ்ட் சதத்தையும் ரசிகர்களுக்கு விருந்தாக படைப்பார் என்று நம்பலாம். விராட்கோலி இதுவரை 104 டெ ஸ்ட் போட்டிகளில் ஆடி 8119 ரன்களை விளாசியுள்ளார். அதில் 27 சதங்களும், 28 அரைசதங்களும் அடங்கும்.


மேலும் படிக்க: IND vs AUS Test: ஆஸ்திரேலியாவிற்கு மரண அடி கொடுத்த இந்தியாவின் மறக்க முடியாத வெற்றிகள்..! ஓர் அலசல்


மேலும் படிக்க: Womens T20 World Cup: ஆஸ்திரேலியாவை புரட்டியெடுக்க புயலாய் களமிறங்கும் இந்திய அணி.. பயிற்சி ஆட்டத்தில் இன்று மோதல்..!