2023ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கியுள்ள இந்திய அணிக்கு உண்மையான சவால் இனிதான் உள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு உலக கிரிக்கெட் அரங்கிலும், ஆசிய கண்டத்திலும் எப்போதும் குடைச்சல் அளிக்கும் அணியாக இருப்பது இந்தியா ஆகும்.


இதுவரை இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பதிவு செய்த மறக்க முடியாத 5 டெஸ்ட் வெற்றிகளை கீழே காணலாம்.


மெல்போர்ன், 1977ம் ஆண்டு:


ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியை வெற்றி பெற்றது 1977ம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில்தான். 1977ம் ஆண்டு டிசம்பர் மாதம் மெல்போர்னில் நடைபெற்ற இந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. கவாஸ்கர், சேத்தன் சவுகான் டக் அவுட் ஆக மொகிந்தர் அமர்நாத், குண்டப்பா விஸ்வநாத் ஜோடி அசத்தியது. இவர்களின் அபார அரைசதத்தாலும், கடைசி கட்டத்தில் அசோக் மன்கட் 44 ரன்கள் எடுத்ததாலும் இந்தியா 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.




அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 213 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது. சந்திரசேகர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்தியாவின் 2வது இன்னிங்சில் கவாஸ்கர் 118 ரன்கள் விளாச, மற்றவர்கள் ஓரளவு பங்களிப்பு அளிக்க இந்தியா 343 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 387 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை சந்திரசேகர் துவம்சம் செய்தார். கேப்டன் பிஷன் பேடியும் மிரட்ட ஆஸ்திரேலிய 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சந்திரசேகர் 2வது இன்னிங்சிலும் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த போட்டியில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவை இந்தியா அதன் சொந்த மண்ணிலே வைத்து 222 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய வரலாறை தொடங்கியது.


அடிலெய்ட், 1985ம் ஆண்டு


1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்தியா முழுவதும் கபில்தேவ் பிரபலமாகியிருந்த தருணம் அது. கேப்டன் கபில்தேவ் தலைமையில் 1985ம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி முதல் டெஸ்டை அடிலெய்டில் ஆடியது. ஆலன் பார்டர் தலைமையில் களமிறங்கிய ஆஸ்திரலிய அணிக்கு டேவிட் பூன் மற்றும் கிரெக் ரிச்சி அபார சதம் அடிக்க ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 381 ரன்களை குவித்தது. இந்திய அணியில் கேப்டன் கபில்தேவ் மட்டும் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ஜாம்பவான் ஆலன் பார்டரை 49 ரன்களில் போல்டாக்கி அசத்தினார்.


இமாலய ரன்களை குவித்த ஆஸ்திரேலிய இந்தியாவை எளிதில் வீழ்த்தலாம் என்ற கணக்கை இந்திய பேட்ஸ்மேன்கள் தவிடுபொடியாக்கினர். கவாஸ்கர் களத்தில் நங்கூரமாக நின்றார். ஸ்ரீகாந்த், சேத்தன் சர்மா அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். கவாஸ்கர் ஆட்டமிழக்காமல் 166 ரன்களை விளாசினார். அமர்நாத் 37 ரன்கள், கபில்தேவ் 38 ரன்கள், ரவிசாஸ்திரி 42 ரன்கள் கடைசி கட்டத்தில் ஷிவ்பால் யாதவ் 123 பந்துகளில் 41 ரன்கள் என ஆஸ்திரேலியாவிற்கு தண்ணீர் காட்டிவிட்டனர்.


இந்தியா முதல் இன்னிங்சில் மட்டும் 510 ரன்களை குவித்தது. இதனால், ஆஸ்திரேலிய தனது 2வது இன்னிங்சில் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இது ஒரு மறக்க முடியாத போட்டியாக திகழ்ந்தது. இந்த போட்டி ட்ரா ஆனாலுமே இந்திய அணிக்கு வெற்றி என்றே கருதலாம்.


அடிலெய்ட், 2003ம் ஆண்டு:


ஆஸ்திரேலியாவிற்கு அதன் சொந்த மண்ணிலே தண்ணி காட்டிய அணிகளில் இந்தியா முதன்மையான அணி என்பதற்கு இந்த போட்டியும் ஒரு சான்று ஆகும். அடிலெய்டில் 2003ம் ஆண்டு நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா பாண்டிங்கின் அபார இரட்டை சதத்தால் 556 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி பாலோ ஆன் ஆகிவிடும் என்று அனைவரும் நினைத்த நிலையில், ராகுல் டிராவிட் இரட்டை சதத்தால் பதிலடி தர, லட்சுமணன் 148 ரன்கள் குவித்து பக்கபலமாக நின்றார். இதனால். இந்திய அணி 523 ரன்களை எடுத்தது.




தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக. இந்திய அணிக்கு 230 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் டிராவிட் அபாரமாக ஆடி 72 ரன்களை குவித்து ஆட்டமிழக்காததால் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மெல்போர்ன், 2013ம் ஆண்டு:


2013ம் ஆண்டு இந்திய அணி மெல்போர்னில் ஆடிய 3வது டெஸ்ட் மறக்க முடியாதது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்தியா 2வது இன்னிங்சில் 106 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. தொடர்ந்து 399 ரன்கள் இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 261 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியதால் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது.


பிரிஸ்பேன், 2021


பிரிஸ்பேனின் கப்பா மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா லபுசேக்னே சதத்தால் 369 ரன்களை குவிக்க, இந்தியா 336 ரன்களை எடுத்தது. ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் அபாரமாக ஆடினர். தொடர்ந்து ஆஸ்திரேலியா 294 ரன்களை 2வது இன்னிங்சில் குவிக்க, 328 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்தியாவிற்கு சுப்மன் கில் 91 ரன்களை தொடக்க வீரராக அடித்து அசத்த, புஜாரா 56 ரன்களில் ஆட்டமிழக்க ரிஷப்பண்ட் தனி ஆளாக மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.




கடைசிவரை ஆட்டமிழக்காத ரிஷப்பண்ட் 89 ரன்களை விளாச இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டியது. இளம் பட்டாளத்தை கொண்டு இந்தியா பலமிகுந்த ஆஸ்திரேலியாவை வென்றது என்றே கூறலாம்.