இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது. குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சு கடந்த போட்டியில் மோசமாக அமைந்தது. இது தொடர்பாக பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். 


 


இந்நிலையில் இந்திய அணி தொடர்பாக முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, “ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அப்போது அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் மாற்று வீரராக வந்தார். ஆனால் அவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இல்லை. அப்படி இருக்கும் போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் அப்படி இந்திய அணியில் இடம்பிடித்தார். 


 






டி20 உலகக் கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்களில் ஒருவரான தீபக் சாஹர் ஏன் அணியில் இடம்பெறவில்லை. டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ரிசர்வ் பட்டியலில் உள்ள வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்க வேண்டும். ஏனென்றால் டி20 உலகக் கோப்பை தொடரில் யார்க்காவது காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக இவர்கள் தான் களமிறங்க உள்ளனர். அப்படி இருக்கும் போது ஏன் உமேஷ் யாதவ் அணியில் விளையாடினார். தீபக் சாஹருக்கு காயம் எதுவும் உள்ளதா அது பற்றி ஒரு தகவலும் இல்லையே.


 


இந்த அணி தேர்வு தொடர்பாக இந்திய அணி நிர்வாகம் அடுத்த முறை செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். எனினும் அவர் 2 ஓவர்கள் வீசி 27 ரன்கள் விட்டு கொடுத்தார். உமேஷ் யாதவ் இந்திய டி20 அணியில் கடைசியாக 2018ஆம் ஆண்டு விளையாடினார். அதன்பின்னர் அவர் தற்போது தான் மீண்டும் இந்திய அணியில் களமிறங்குகிறார். இதன்காரணமாக இவருடைய திடீர் தேர்வு தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.