இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளிக்கு இடையேயான 2 ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தானா 91 ரன்கள் விளாசி அசத்தினார். நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தானா, ஷஃபாலி வர்மா களமிறங்கினர். இந்த போட்டியிலும் ஷஃபாலி வர்மா ஒற்றை இலக்குடன் வெளியேற, மந்தனா ஒருபுறம் நிலைத்து நின்று ஆடி 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய யாஸ்திகா பாட்டியா 26 ரன்களும், ஹர்லீன் தியோல் தன் பங்கிற்கு 58 ரன்களும் எடுக்க, களமிறங்கியது முதல் அதிரடிகாட்டிய இந்திய அணி கேப்டன் கவுர் 111 பந்துகளில் 143 ரன்கள் குவித்தார். இது இவருக்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 5வது சதமாகும். மேலும், ஹர்மன்பிரீத் கவுர் கடைசி 11 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை:
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் 143 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணி 333 ரன்கள் குவித்தது. இதன்மூலம், ஒருநாள் போட்டியில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது.
- ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனாவின் ஒருநாள் சதங்களின் சாதனையை சமன் செய்தார். இருவரும் தலா 5 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் 7 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
- இந்த வெற்றியின் மூலமாக 23 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளது. கடைசியாக இங்கிலாந்தில் 1999ஆம் ஆண்டு கடைசியாக 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. அப்போது சந்தர்கவுந்தா கவுல் கேப்டனாக இருந்தார். அவரும் பஞ்சாபை சேர்ந்தவர். தற்போதைய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் பஞ்சாபை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி நேரத்தில் தீப்தி சர்மா 9 பந்துகளில் 15 அடித்து அசத்த, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ஹர்மன்பிரீத் கவுர் 143 ரன்களுடனும், தீப்தி சர்மா 15 ரன்களுடனும் அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 50 ரன்களுக்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்கள் விழ தொடக்கத்தில் தடுமாற தொடங்கியது. அடுத்து உள்ளே வந்த ஆலிஸ் கேப்ஸி, கேப்டன் எமி ஜோன்ஸ், சார்லோட் டீன் ஆகியோர் ஓரளவு தாக்குபிடித்து 30 ரன்களை கடந்தனர். மறுபுறம் டேனியல் வியாட் மட்டும் ஆறுதல் அரைசதம் கடக்க, 44.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 245 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்கள் வெற்றி பெற்றதுடன், 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்களும், தயாளன் ஹேமலதா 2 விக்கெட்களும், தீப்தி மற்றும் வர்மா தலா 1 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர்.