நியூசிலாந்து ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று உள்ளது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய ஏ அணி 1-0 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இன்று ஒருநாள் தொடர் தொடங்கியது. சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்திய ஏ அணி இன்று நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 


இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்திய ஏ அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களத்திற்கு பேட்டிங் செய்ய வரும்போது ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தை எழுப்பினர். அவருக்கு பலரும் கத்தி பேனர் காட்டி வரவேற்பு அளித்தனர். டி20 உலகக் கோப்பைக்கான அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பலரும் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வந்தனர். 


 






இந்தச் சூழலில் அந்த அறிவிப்பிற்கு சஞ்சு சாம்சன் இந்திய ஏ அணியின் கேப்டனாக களமிறங்கிய போது ரசிகர்கள் அவருக்கு பெரும் ஆதரவை அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 


முன்னதாக இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய ஏ அணியில் ஷர்துல் தாகூர் மற்றும் குல்தீப் சென் ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசினர். இதனால் நியூசிலாந்து ஏ அணி 40.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், குல்தீப் சென்  3 விக்கெட்டும் எடுத்தனர். 


 






அடுத்து 168 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணியில் ருதுராஜ் கெய்க்வாட்(41), ராகுல் திரிபாதி (31), ராஜாட் பட்டிதார்(45*) ஆகியோர் அசத்தினர். கடைசி வரை கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 29* ரன்கள் எடுத்திருந்தார். இதனால் இந்திய ஏ அணி 31.5 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 




மேலும் படிக்க: 11 பந்துகளில் இங்கிலாந்து அணியை கதறவிட்ட கவுர்.. இந்த போட்டியில் இத்தனை ரெக்கார்ட்களா..?