மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரை இந்திய அணி தொடங்கியது. நெருக்கடியான சூழலில் பும்ரா தலைமையில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி தந்தது. 

சிட்னியில் கடைசி டெஸ்ட்:


ஆனால், ரோகித் சர்மா மீண்டும் அணிக்குத் திரும்பிய 3 டெஸ்ட் போட்டியில் இரண்டு தோல்வி, ஒரு டிரா என்று இந்தியா நெருக்கடியான நிலைக்குச் சென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு பிரகாசமான வாய்ப்பு இருந்த இந்திய அணிக்கு, தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு ஏறத்தாழ கையைவிட்டுப் போய்விட்டது என்பதே உண்மை. 


2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ள நிலையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்துவிடக் கூடாது என்றால் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் கடைசி டெஸ்ட் நாளை மறுநாள் சிட்னியில் தொடங்குகிறது. 

விராட் கோலி, ரோகித் சர்மா: 


இந்த போட்டியில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மீதே அமைந்துள்ளது. ஏனென்றால் இந்த தொடர் முழுவதும் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. விராட் கோலி பெர்த் டெஸ்டில் சதம் அடித்த பிறகு அடுத்து ஆடிய அனைத்து போட்டியிலும் மிக மோசமாக ஆடி வருகிறார். குறிப்பாக, அவரது பலமான கவர் டிரைவ் ஷாட்டிலே அவர் அவுட்டாவது பார்ப்பவர்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. 


மற்றொரு ஜாம்பவனான கேப்டன் ரோகித் சர்மா மோசமான ஃபார்மில் உள்ளார். பேட்டிங் ஆர்டர் மாறி வந்த ரோகித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கிய போது சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. கோலியைப் போலவே அவர் அவுட்டாகும் விதமும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. 

ஆஸ்திரேலிய மண்ணில் கடைசி தொடர்:


இவர்களின் மோசமான ஆட்டத்தால் இவர்களை ஓய்வு பெறுங்கள் என்ற கோஷமும் வலுப்பெற்றுள்ளது. 35 வயதைக் கடந்த இவர்கள் இருவரும் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு. ஆனால், அவர்கள் இருவரும் கம்பேக் தருவார்கள் என்று அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துள்ளனர். 


37 வயதான ரோகித் சர்மாவிற்கும், 36 வயதான விராட் கோலிக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவே கடைசி டெஸ்ட் தொடராக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த சிட்னி டெஸ்ட் போட்டியே கடைசி போட்டியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த போட்டியில் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அத்தனை விமர்சனங்களுக்கும்  பதிலடி தருவார்கள் என்று மிகுந்த எதி்ர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 


ரோகித் சர்மா இந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவார் என்று தகவல் வெளியாகி இருப்பதாலும் ரசிகர்கள் ஹிட் மேன் சிறப்பான பேட்டிங்கை விருந்தாக அளிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மிக மோசமான விமர்சனம், அவுட் ஆஃப் பார்ம் இவற்றை எல்லாம் பல முறை பார்த்து மீண்டு வந்தவர்கள் இவர்கள் இருவரும் என்பதால் சிட்னியில் கண்டிப்பாக கம்பேக் தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.