ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், இந்திய அணி தனது பெயரில் ஒரு தனித்துவமான சாதனையை படைத்துள்ளது. 


டி20 வரலாற்றில் அதிகபட்சமாக 220+ ரன்கள் எடுத்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இதுவரை இந்திய அணி டி20 போட்டியில் 9வது முறையாக 220+ ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. இந்த பட்டியலில், தென்னாப்பிரிக்கா அணி 8 முறை 220+ ரன்கள் குவித்து 2வது இடத்தில் உள்ளது. 


இந்தப் பட்டியலில் மற்ற அணிகளின் நிலைமைகள் என்ன..? 


இந்த பட்டியலில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. டி20 வரலாற்றில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி இதுவரை 7 முறை 220+ ரன்களையும், நடப்பு டி20 சாம்பியனான இங்கிலாந்து அணி 6 முறை 220+ ரன்களை எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான அரைசதம் விளாசினார். ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 212 ஆக இருந்தது. பவர்பிளேயில் சர்வதேச டி20 போட்டியில் இந்தியாவுக்காக அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். 


பவர்பிளேயில் அரைசதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர்:


2020 ஆம் ஆண்டு ஹாமில்டனில் நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் பவர்பிளேயில் அரைசதம் அடித்ததன் மூலம் பவர்பிளேயில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். பவர்பிளேயில் ரோஹித் சர்மா 23 பந்துகளில் 50* ரன்கள் எடுத்திருந்தார். இதற்குப் பிறகு, 2021 இல் துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக நடந்த டி20 சர்வதேச போட்டியில் கேஎல் ராகுல் 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். 


இந்தியாவுக்காக பவர்பிளேயில் அரைசதம் அடித்த பேட்ஸ்மேன்கள் (டி20 சர்வதேச போட்டியில்)


53 (25 பந்துகள்) - யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிராக ஆஸ்திரேலியா, திருவனந்தபுரம், 2023
50 (19 பந்துகள்) - KL ராகுல் vs ஸ்காட்லாந்து, துபாய், 2021
50*(23 பந்துகள்) - ரோஹித் சர்மா vs நியூசிலாந்து, ஹாமில்டன், 2020.


இது தவிர விராட் கோலியின் சிறப்பான சாதனையையும் ஜெய்ஸ்வால் சமன் செய்தார்.  ஜெய்ஸ்வால் நேற்றைய இன்னிங்ஸில் 9 பவுண்டரிகளை அடித்தார். முன்னதாக, இந்திய அணிக்காக, விராட் கோலி சர்வதேச டி20 பவர்பிளேயில் அதிகபட்சமாக 9 பவுண்டரிகளை அடித்த சாதனையை படைத்திருந்தார். தற்போது அவரை சமன் செய்துள்ளார் ஜெய்ஸ்வால். 


போட்டி சுருக்கம்: 


இந்தியா- ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் ஐம்பது ரன்களை கடந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷான் முறையே 53, 58 மற்றும் 52 ரன்களை எடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் எடுத்தது. 


236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.