இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடர் முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ரோ-கோ:
அதற்கு காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக இருப்பதே ஆகும். இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்துள்ள விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 2027 உலகக்கோப்பையில் ஆட வேண்டும் என்று ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால், கம்பீர், அகர்கர் உள்ளிட்ட பிசிசிஐ நிர்வாகம் அவர்களுக்கு எதிராக உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
விராட் கோலியின் ருத்ரதாண்டவம்:
இந்த நிலையில், விராட் கோலி இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக படைத்துள்ள சாதனைகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம். இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியாவிலும் தனக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள விராட் கோலிக்கு மிகவும் பிடித்தமான அணிகளில் ஒன்று ஆஸ்திரேலியா ஆகும்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எப்படி?
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 50 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி 48 இன்னிங்சில் பேட் செய்துள்ளார். அதில் 8 சதங்களும், 15 அரைசதங்களும் அடங்கும். 2 முறை டக் அவுட்டாகியிருந்தாலும், 3 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 ஆயிரத்து 451 ரன்களை எடுத்துள்ளார். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு அடுத்தபடியாக ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவே ஆகும்.
அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 123 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட் 93.69 ஆக வைத்துள்ளார். சராசரியாக 54.57 ரன்கள் வைத்துள்ளார். குறிப்பாக, ஆஸ்திரேலிய மண்ணில் 29 போட்டிகளில் 29 இன்னிங்சிலும் பேட் செய்துள்ளார். அதில் 5 சதங்களும், 6 அரைசதங்களும் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் ஒரு முறை கூட ரன் எடுக்காமல் விராட் கோலி அவுட்டானது இல்லை.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் அசத்தல்:
ஆஸ்திரேலிய மண்ணில் மட்டும் 1327 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் மட்டும் 51.04 சராசரியாக வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 89 ஆக வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் 4 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 சதங்கள் விளாசியுள்ளார். ப்ரிஸ்பேன் மைதானத்தில் 2 அரைசதம் விளாசியுள்ளார். மெல்போர்ன் மைதானத்தில் 6 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம் விளாசியுள்ளார்.
36 வயதான விராட் கோலி இதுவரை 302 ஒருநாள் போட்டிகளில் ஆடி 14 ஆயிரத்து 181 ரன்களை எடுத்துள்ளார். அதில் 51 சதங்களும், 74 அரைசதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ஒரே வீரர் என்ற பெமையை விராட் கோலி மட்டுமே படைத்துள்ளார்.
ப்ரட்லீ, ஜான்சன், ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, நாதன் லயன் போன்ற ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் வீரர்களுக்கு எதிராகவும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.