உலகக்கோப்பை மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று முக்கியமான போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.


ஸ்மிருதி மந்தனா 10 ரன்களிலும், அதிரடி வீராங்கனை ஷெஃபாலி வர்மா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 28 ரன்களுக்குள் முக்கியமான 2 விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி தடுமாறியது. பின்னர், 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் மித்தாலிராஜ் – யாஸ்திகா பாட்டீயா ஜோடி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.




இருவரும் இணைந்து நிதானமாக ஆடவும், அதே நேரத்தில் ஏதுவான பந்துகளில் மட்டும் அடித்தும் ஆடினர். பொறுப்புடன் ஆடிய கேப்டன் மித்தாலிராஜ் அரைசதம் அடித்தார். ஒருநாள் போட்டியில் இது அவரது 63-வது அரைசதம் ஆகும். அவர் அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் யாஸ்திகா பாட்டீயாவும் அரைசதம் அடித்தார். இவர்களது பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது.


அணியின் ஸ்கோர் 158 ஆக உயர்ந்தபோது 83 பந்தில் 6 பவுண்டரியுடன் 59 ரன்கள் எடுத்திருந்த யாஸ்திகா பாட்டீயா அவுட்டானார். சிறிது நேரத்தில் சிறப்பாக ஆடி வந்த கேப்டன் மித்தாலி ராஜ் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்தார். 186 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா மீண்டும் தடுமாறியது. பின்னர், களமிறங்கிய ரிச்சா கோஷ் 8 ரன்களிலும், சினேகா ரானா ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்ததால் இந்திய 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.




பின்னர், ஹர்மன்பிரீத் கவுர் – பூஜா வஸ்திரகர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி இந்திய அணியை மீண்டும் மீட்டெடுத்தது. இருவரும் அதிரடியாக ஆடி இந்திய அணியின் ரன்னை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இவர்கள் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது. பூஜா வஸ்திரகர் அடித்த இரண்டு பிரம்மாண்ட சிக்ஸர்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்தது.


ஹர்மன்பிரீத் கவுர் 47 பந்தில் 6 பவுண்டரியுடன் 57 ரன்களுடனும், பூஜா வஸ்திரகர் 28 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 34 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர், 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண