இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் பும்ரா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
5 விக்கெட்டுகள்:
பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த இந்த மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் நிதிஷ் ரெட்டி, ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங் உதவியால் 150 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர்.
ஆஸ்திரேலியாவின் கவாஜா, நாதன் மெக்ஸ்வீன்ஸி, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ் ஆகியோரை காலி செய்து ஆஸ்திரேலியாவிற்கு கேப்டன் பும்ரா பெரும் தலைவலியாக மாறினார். இந்த மைதானத்தில் அவர் 5 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்சில் வீழ்த்தியுள்ளார். உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக உலா வரும் பும்ரா உலகின் மிகவும் முக்கியமான மைதானங்களில் ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அனைத்து மைதானங்களிலும் ஆதிக்கம்:
இந்தியா மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெரிய அணிகளில் நியூசிலாந்து மைதானத்தில் மட்டுமே பும்ரா 5 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்சில் வீழ்த்தவில்லை. மற்ற முன்னணி ஜாம்பவான்களை அவரது சொந்த மைதானத்திலே பும்ரா திணறவைத்துள்ளார்.
உலகின் மிகவும் பிரபலமான மைதானங்களான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், பெர்த் மைதானத்திலும், இங்கிலாந்தின் நாட்டிங்காமில் இரண்டு முறையும், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் ஒரு முறையும், கேப்டவுனில் இரண்டு முறையும் 5 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்சில் வீழ்த்தியுள்ளார்.
ஸ்மித்தை கோல்டன் டக் அவுட்டாக்கிய பவுலர்:
உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்தை கோல்டன் டக் அவுட்டாக்கிய 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஸ்மித் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின் பந்தில் மட்டுமே கோல்டன் டக் அவுட்டானார்.
30 வயதான பும்ரா 41 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 11 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொத்தம் 178 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர 89 ஒருநாள் போட்டிகளில் ஆடி 149 விக்கெட்டுகளையும், 70 டி20 போட்டிகளில் ஆடி 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 133 போட்டிகளில் 165 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.