IND vs AUS Final: உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண பல பிரபலங்களும் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகை தர உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


உலகக்கோப்பை திருவிழா


15வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்கியது. சென்னை, டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, அஹமதாபாத், தர்மசாலா, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 10 இடங்களில் இந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றது. மேலும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றது. 


இன்று இறுதிப்போட்டி


அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெற்ற லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதியது. இதன் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தது. நவம்பர் 15 ஆம் தேதி நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. நவம்பர் 16 ஆம் தேதி நடந்த 2வது அரையிறுதியின் தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலியா அணி எளிதாக வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 


20 ஆண்டுகளுக்குப் பின் ..


கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோற்றது. இதனைத் தொடர்ந்து 4 உலகக்கோப்பை முடிந்து விட்டது. ஆனால் 20 ஆண்டுகள் கழித்து 2023 ஆம் ஆண்டில் தான் மீண்டும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோதுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பழிதீர்த்து 3வது முறையாக இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்ல சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. 


வருகை தரும் பிரபலங்கள் 


இந்நிலையில் இறுதிப்போட்டியானது இன்று மதியம் 2 மணிக்கு குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியை காண உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் அஹமதாபாத்துக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அங்கு டிக்கெட்டுகள், ஹோட்டல் அறைகள், பேருந்து, ரயில் கட்டண டிக்கெட்டுகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. லட்சக்கணக்கில் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


இப்படியான நிலையில் இறுதிப்போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர் மார்லஸ், அசாம், மேகாலாயா உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட பலரும் வருகை தர உள்ளனர். இதனால் போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றி 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 




மேலும் படிக்க: IND vs AUS Final Score LIVE: பகையுடன் காத்திருக்கும் இந்தியா..? பதம் பார்க்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா.. வெற்றி யாருக்கு..?