உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் மிகவும் பிராமாண்டமான முறையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும் இரண்டு முறை சாம்பியனான இந்தியாவும் மோதவுள்ளது. இந்த போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியுமே இந்த உலகக்கோப்பையில் தத்தமது முதல் போட்டியில் மோதிக்கொண்டன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 



இறுதிப் போட்டிக்கு இரு அணிகளும் தயாராகி வரும் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்கம்மின்ஸ் பேசியதாவது, ”ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் கட்டாயம் இந்த போட்டியை நேரில் காண வருவார்கள். அவர்கள் நிச்சயம் ஒரு சார்பு உடையவராகத்தான் இருப்பார்கள். அதாவது ரசிகர்கள் அனைவரும் இந்திய அணிக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார்கள். அவர்களுக்கு மத்தியில் விளையாடுவதென்பது மிகவும் சவாலான விஷயம். நாளை எங்களின் முக்கியமான வேலை இந்திய ரசிகர்களை ’கப்சிப்’ என அமைதியாக்குவதுதான்” என பேட் கம்மின்ஸ் பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் என மூன்று பேட்ஸ்மேன்களும் டக் அவுட் ஆனார்கள். இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இப்படியான ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார் என ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் பேட் கம்மின்ஸின் இந்த் கருத்து இந்திய ரசிகர்கள் பலரின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது என்றே கூறலாம். மொத்தத்தில் இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதுடன் அதிகப்படியான பரபரப்பை உண்டு பண்ணக்கூடிய போட்டியாகவும் இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதற்கு முன்னர் இந்தியாவுன் ஆஸ்திரேலியாவும் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 359 ரன்கள் சேர்த்தது. அப்போதைய கேப்டன் ரிக்கி பாண்டின் அந்த போட்டியில் 140 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதன் பின்னர் இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது மூன்றாவது உலகக் கோப்பையை வென்றது.  ஆஸ்திரேலியா அணி இதுவரை 8முறை (2023 உட்பட) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. 1987, 1999, 2003, 2007, 20015 கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது. 


1983, 2003, 2011 2023 என இதுவரை நான்கு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி தனது மூன்றாவது கோப்பையை வெல்லுமா என்பதை நாளை இரவு முடிவு செய்துவிடும். காத்திருப்போம் நம்பிக்கையுடன் கோப்பை நமக்குதான்.