உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023ம் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.


உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இதுவரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலை கீழே காணலாம்,


கிளைவ் லாயிட் (1975)


முதலாவது உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில்  முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அந்த அணியின் கேப்டன் கிளைவ் லாயிட் 85 பந்துகளில் 102 ரன்களை விளாசினார். ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவே ஆகும். அந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 291 ரன்களை எடுத்தது. அடுத்த ஆடிய ஆஸ்திரேலிய அணி 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் முதன் முதலாக சாம்பியன் பட்டம் வென்றது.


விவியன் ரிச்சர்ட்ஸ் (1979)


இரண்டாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த முறை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தொடக்க விக்கெட்டுகள் சரிந்தபோதிலும், அடுத்து வந்த விவ் ரிச்சர்ட்ஸ் அபாரமாக ஆடி 138 ரன்களை விளாசினார். இதனால்,286 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் குவித்தது. இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 194 ரன்களுக்கு சுருண்டது. 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றது.


அரவிந்த் டி சில்வா ( 1996)


1983, 1987ம் ஆண்டுகளில் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் சதம் அடிக்கப்படவில்லை. இந்த நிலையில், 1996ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.- தொடக்க வீரர்கள் ஜெயசூர்யா, கலுவிதரனா ஏமாற்ற குருசிங்கா ஒத்துழைப்புடன் அரவிந்த டி சில்வா அபாரமாக ஆடி சதம் அடித்தார். கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த சில்வா-வால் இலங்கை முதன்முறையைாக உலகக்கோப்பையை வென்றது.


ரிக்கி பாண்டிங் ( 2003)


2003ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்காக கேப்டன் ரிக்கி பாண்டிங் அபாரமாக ஆடி 140 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலியா நிர்ணயித்த 360 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால், 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது.


ஆடம் கில்கிறிஸ்ட் ( 2007)


வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 2007ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதின. மழை காரணமாக 38 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 104 பந்துகளில் 149 ரன்களை எடுத்தார். மழை காரணமாக 36 ஓவர்களில் இலங்கைக்கு 269 ரன்களாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 36 ஓவர்களில் 215 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.


மஹேலா ஜெயவர்த்தனே ( 2011)


2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே 88 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 103 ரன்களை எடுத்தார். இதையடுத்து, இலங்கை நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கம்பீர், தோனியின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி 48.2 ஓவர்களில் 277 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால், 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.


இதுவரை உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் 2011ம் ஆண்டைத் தவிர மற்ற அனைத்து ஆண்டுகளிலும் சதம் அடித்த வீரரின் அணியே சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.