பார்டர் - கவாஸ்கர் டிராபி 2023 இரண்டாவது டெஸ்டில் விளையாடியதன் மூலம், புஜாரா தனது 100 டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். இப்போது பார்டர் - கவாஸ்கர் டிராபியில் எஞ்சிய இரண்டு போட்டிகளில் மற்றொரு மிகப்பெறிய சாதனையையும் புஜாரா படைக்க இருக்கிறார். 


புதிய சாதனை:


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 1931 டெஸ்ட் ரன்களை சேட்டேஷ்வர் புஜாரா அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் புஜாரா இன்னும் 69 ரன்கள் எடுத்தால், கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா என்னும் புகழ்பெற்ற அணிக்கு எதிராக 2000 டெஸ்ட் ரன்களை அவர் பூர்த்தி செய்வார். இதன்மூலம் 2000 ரன்களை கடந்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். 


இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2000 டெஸ்ட் ரன்களுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்கள் ஆவார். இந்த பட்டியலில் இந்திய அணியின் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலியே பின் தங்கியுள்ளார். கோலி இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1758 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 


மறுபுறம் இந்தியாவிற்கு எதிராக ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கெல் கிளார்க் மட்டுமே 2000 பிளஸ் ரன்களை எடுத்துள்ளனர். இந்த முறை புஜாரா 69 ரன்கள் எடுத்து இந்த எலைட் பட்டியலில் இணையலாம். 


இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:



  • இந்த பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 39 போட்டிகளில் 74 இன்னிங்ஸ்களில் 55 சராசரியுடன் 3630 ரன்கள் எடுத்துள்ளார்.

  • ரிக்கி பாண்டிங் இந்த பட்டியலில் இரண்டாவது இருக்கிறார். பாண்டிங் 29 போட்டிகளில் 51 இன்னிங்ஸில் 54.36 சராசரியுடன் 2555 ரன்கள் எடுத்துள்ளார்.

  • விவிஎஸ் லட்சுமண் 29 போட்டிகளில் 54 இன்னிங்ஸ்களில் 49.67 சராசரியுடன் 2434 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

  • நான்காவது இடத்தில் இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இருக்கிறார். இவர் 32 போட்டிகளில் 60 இன்னிங்ஸ்களில் 39.68 சராசரியுடன் 2143 ரன்கள் எடுத்துள்ளார்.

  • மைக்கேல் கிளார்க் 22 போட்டிகளில் 40 இன்னிங்ஸ்களில் 53.92 சராசரியில் 2049 ரன்கள் எடுத்து 5வது இடத்தில் உள்ளார்.

  • இந்த பட்டியலில் சேதேஷ்வர் புஜாரா ஆறாவது இடத்தில் உள்ளார். 22 போட்டிகளில் 40 இன்னிங்ஸ்களில் 52.18 சராசரியுடன் 1931 ரன்கள் எடுத்துள்ளார்.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் வருகின்ற மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. 


ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டோட் , மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன்


இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ். பாரத்  (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ் , ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்