மகளிர் டி20 உலகக் கோப்பையின் கடைசி குரூப் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 56 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்து அரை சதம் விளாசினார்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு எமனாக மழை வந்தது. மழையால் பாதி ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, அயர்லாந்து அணி 8.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அயர்லாந்து அணி டக்வொர்த் லீவிஸ் இலக்கை விட 5 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதன் மூலம் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் விதியின் கீழ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயர்லாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ”மகளிர் டி20 உலகக் கோப்பையில் இனிவரும் போட்டிகளில் எங்கள் அணி 100 சதவீதம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தொடருக்கான எங்கள் அணி கடுமையாக உழைத்தது. அதன் பலன்தான் நாங்கள் அரையிறுதிக்கு வந்துவிட்டோம், எங்கள் அணி அரையிறுதி போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும்.

மேலும், அயர்லாந்துக்கு எதிராக விளையாடியது வேடிக்கையாக இருந்தது. இந்த டூ ஆர் டை போட்டியில் எங்களால் முடிந்ததைச் செய்ய விரும்பினோம். ஆனால், எங்களுக்கே வெற்றி கிடைத்து விட்டது. ஸ்மிருதி மந்தனா சிறப்பான பார்மில் இருக்கிறார். அவர் ரன் அடிக்கும்போதெல்லாம் ​இந்திய அணி பெரிய ஸ்கோருக்கு செல்லுகிறது. இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர்.” என்று தெரிவித்தார். 

அரையிறுதி போட்டிகள்:

வரும் பிப்ரவரி 23 ம் தேதி (நாளை) கேப்டவுனில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 முதல் அரையிறுதியில் மெக் லானிங் தலைமையிலான நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா அணியும், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியானது வருகிற பிப்ரவரி 24 நடைபெறுகிறது. இதில், தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகள்:

தேதி அணிகள் இடம்
பிப்ரவரி 23 ஆஸ்திரேலியா vs இந்தியா கேப்டவுன்
பிப்ரவரி 24 இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா கேப்டவுன்

இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேவிகா வைத்யா, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்

ஆஸ்திரேலியா: பெத் மூனி (விக்கெட் கீப்பர்), எலிஸ் பெர்ரி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்