இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சதம் விளாசினர்.
அதன்பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இந்திய அணி 71 ரன்களில் இருந்தபோது ரோகித் ஷர்மா அவுட் ஆகி வெளியேற புஜாரா களமிறங்கினார். தொடக்கம் முதல் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என பொறுப்பாக ஆடிய சுப்மன் கில் 195 பந்துகளில் தனது சர்வதேச இரண்டாவது டெஸ்ட் சதத்தினை அடித்தார். இது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தனது முதல் சதத்தினை பதிவு செய்து இருந்தார்.
புஜாராவும் கில்லும் ஆட்டமிழக்க இந்திய அணியினை விராட் கோலியும் ஜடேஜாவும் முன்னோக்கி இழுத்துச் சென்றனர். 14 இன்னிங்ஸ்க்குப் பிறகு அரைசதம் விளாசிய கோலிக்கு மைதானம் முழுவதும் கைத்தட்டல்கள் குவிந்தது. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் சேர்த்துள்ளது. இது ஆஸ்திரேலிய அணியை விட 191 ரன்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. களத்தில் விராட் கோலி 59 ரன்களும், ஜடேஜா 16 ரன்களும் சேர்த்த நிலையில் உள்ளனர்.